002 திருமாளிகைத் தேவர் – கோயில் – ‘உயர்கொடி யாடை’

<– 9ஆம் திருமுறை

 

(1)
உயர்கொடிஆடை மிடைபடலத்தின்
ஓமதூமப் படலத்தின்
பியர்நெடு மாடத்தகிற் புகைப் படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
நிறைந்த சிற்றம்பலக் கூத்தா
மயரறும் அமரர் மகுடந்தோய் !மலர்ச்சே
வடிகள் என் மனத்து வைத்தருளே

(2)
கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
கனகமாளிகை கலந்தெங்கும்
பெருவள முத்தீ நான்மறைத் தொழிலால்
எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியந்
திரண்ட சிற்றம்பலக் கூத்தா
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
உன்அடிக் கீழதென் உயிரே

(3)
வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்
கரும்பொடு மாந்திடு மேதி
பிரம்பிரி செந்நெற் கழனிச்செங் கழுநீர்ப்
பழனஞ்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புரை முடி வானவர்அடி முறையால்
இறைஞ்சு சிற்றம்பலக் கூத்தா
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
நினைந்து நின்றொழிந்ததென் நெஞ்சே

(4)
தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில்
கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில இலயத் திருநடத்தியல்பில்
திகழ்ந்த சிற்றம்பலக் கூத்தா
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
மணிக்குறங்கடைந்ததென் மதியே

(5)
நிறைதழை வாழை நிழற்கொடி !நெடுந்தெங்
கிளங்கமு(கு) உளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதண
முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள் நீர்த் தரளத் திரள்கொள் நித்திலத்த
செம்பொற் சிற்றம்பலக் கூத்தா
பொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக்
கச்சுநூல் புகுந்ததென் புகலே

(6)
அதுமதி இது என்றலந்தலை நூல்!கற்
றழைப்பொழிந்(து)அருமறை அறிந்து
பிதுமதி வழி நின்றொழிவிலா வேள்விப்
பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணுந் தேரரும் சேராச்
செல்வச் சிற்றம்பலக் கூத்தா
மதுமதி வெள்ளத் திருவயிற்றுந்தி
வளைப்புண்டென் உளம் மகிழ்ந்ததுவே

(7)
பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்
பொடியணி பூணநூல் அகலம்
பெருவரை புரை திண்தோளுடன் காணப்
பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமருவுதரத் தார்திசை அடைப்ப
நடஞ்செய் சிற்றம்பலக் கூத்தா
உருமருவுதரத் தனிவடந் தொடர்ந்து
கிடந்ததென் உணர்வுணர்ந்துணர்ந்தே

(8)
கணிஎரி விசிறுகரந் துடி விடவாய்க்
கங்கணச் செங்கை மற்றபயம்
பிணிகெட இவைகண்டுன் பெரு நடத்திற்
பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்தென் அமுதே
சீர்கொள் சிற்றம்பலக் கூத்தா
அணிமணி முறுவற் பவளவாய்ச் செய்ய
சோதியுள் அடங்கிற்றென் அறிவே

(9)
திருநெடு மால் இந்திரன்அயன் வானோர்
திருக்கடைக் காவலில் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றிற்
பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின் முப்புரந்தீ
விரித்த சிற்றம்பலக் கூத்தா
கருவடி குழைக்காதமலச் செங்கமல
மலர்முகங் கலந்ததென் கருத்தே

(10)
ஏர்கொள் கற்பகம் ஒத்திரு சிலைப் புருவம்,
பெருந்தடங் கண்கள் மூன்றுடைஉன்
பேர்கள்ஆயிரம் நூறாயிரம் பிதற்றும்
பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள் கொக்கிறகுங் கொன்றையுந் துன்று
சென்னிச் சிற்றம்பலக் கூத்தா
நீர்கொள் செஞ்சடை வாழ் புதுமதி மத்தம்
நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே

(11)
காமனக் காலன் தக்கன் மிக்கெச்சன்
படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்
சேம நற்றில்லை வட்டங் கொண்டாண்ட
செல்வச் சிற்றம்பலக் கூத்தா
பூமலரடிக் கீழ்ப் புராண பூதங்கள்
பொறுப்பர்என் புன்சொலின் பொருளே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page