ஸ்ரீவாஞ்சியம் – சுந்தரர் தேவாரம்:

<– ஸ்ரீவாஞ்சியம்

(1)
பொருவனார், புரி நூலர்
    புணர்முலை உமையவளோடு
மருவனார், மருவார் பால்
    வருவதும் இல்லை நம் அடிகள்
திருவனார் பணிந்தேத்தும்
    திகழ்திரு வாஞ்சியத்துறையும்
ஒருவனார், அடியாரை
    ஊழ்வினை நலிய ஒட்டாரே
(2)
தொறுவில் ஆன்இள ஏறு
    துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச்
    செங்கயல் பங்கயத்து ஒதுங்கக்
கறுவிலா மனத்தார்கள்
    காண்தகு வாஞ்சியத்தடிகள்
மறுவிலாத வெண்ணீறு
    பூசுதல் மன்னும் ஒன்றுடைத்தே
(3)
தூர்த்தர் மூவெயில் எய்து
    சுடுநுனைப் பகழியதொன்றால்
பார்த்தனார் திரள்தோள் மேல்
    பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த மாமலர்ப் பொய்கைத்
    திகழ்திரு வாஞ்சியத்தடிகள்
சாத்து மாமணிக் கச்சங்கு
    ஒருதலை பலதலை உடைத்தே
.
(4)
சள்ளை வெள்ளையம் குருகு
    தானதுவாம் எனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி
    மறுகிஓர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத்
    துறைமல்கு வாஞ்சியத்தடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும்
    விகிர்தம் ஒன்றொழிகிலர் தாமே
(5)
மைகொள் கண்டர், எண் தோளர்
    மலைமகளுடன் உறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை
    குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலம் கழனி
    கமழ்புகழ் வாஞ்சியத்தடிகள்
பைதல் வெண்பிறையோடு
    பாம்புடன் வைப்பது பரிசே
(6)
கரந்தை கூவிள மாலை
    கடிமலர்க் கொன்றையும் சூடிப்
பரந்த பாரிடம் சூழ
    வருவர், நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
    திகழ்தரு வாஞ்சியத்துறையும்
மருந்தனார், அடியாரை
    வல்வினை நலிய ஒட்டாரே
(7)
அருவி பாய்தரு கழனி
    அலர்தரு குவளையம் கண்ணார்
குருவியாய் கிளி சேர்ப்பக்
    குருகினம் இரிதரு கிடங்கில்
பருவரால் குதி கொள்ளும்
    பைம்பொழில் வாஞ்சியத்துறையும்
இருவரால் அறியொண்ணா
    இறைவனது அறைகழல் சரணே
(8)
களங்களார் தரு கழனி
    அளிதரக் களிதரு வண்டு
உளங்களார் கலிப் பாடல்
    உம்பரில் ஒலித்திடும் காட்சி
குளங்களால் நிழல் கீழ்நற்
    குயில்பயில் வாஞ்சியத்தடிகள்
விளங்கு தாமரைப் பாதம்
    நினைப்பவர் வினை நலிவிலரே
(9)
வாழையின்கனி தானும்
    மதுவிம்மு வருக்கையின் சுளையும்
கூழை வானரம் தம்மில்
    கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையம் தண்டால்
    செருச்செய்து தருக்கு வாஞ்சியத்துள்
ஏழை பாகனை அல்லால்
    இறையெனக் கருதுதல் இலமே
(10)
செந்நெலங்கலங் கழனித்
    திகழ்திரு வாஞ்சியத்துறையும்
மின்னலங்கலம் சடையெம்
    இறைவனது அறைகழல் பரவும்
பொன்னலங்கல் நன்மாடப்
    பொழிலணி நாவல் ஆரூரன்
பன்னலங்கல் நன்மாலை
    பாடுமின் பத்தருளீரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page