ஸ்ரீவாஞ்சியம் – சம்பந்தர் தேவாரம்:

<– ஸ்ரீவாஞ்சியம்

(1)
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னியன்ற சடையில் பொலிவித்த புராணனார்
தென்ன என்று வரிவண்டு இசைசெய் திருவாஞ்சியம்
என்னை ஆளுடையான் இடமாக உகந்ததே
(2)
கால காலர், கரிகானிடை மாநடமாடுவர்
மேலர், வேலை விடமுண்டிருள்கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன்னும் திருவாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப்பொலி கோயில் நயந்ததே
(3)
மேவில் ஒன்றர், விரிவுற்ற இரண்டினர், மூன்றுமாய்
நாவில் நாலர், உடல் அஞ்சினர், ஆறர், ஏழோசையர்
தேவில் எட்டர், திருவாஞ்சிய மேவிய செல்வனார்
பாவம் தீர்ப்பர், பழி போக்குவர் தம்அடியார்கட்கே
(4)
சூலமேந்தி வளர் கையினர், மெய் சுவண்டாகவே
சாலநல்ல பொடிப் பூசுவர், பேசுவர் மாமறை
சீலமேவு புகழால் பெருகும் திருவாஞ்சியம்
ஆலமுண்ட அடிகள் இடமாக அமர்ந்ததே
(5)
கையிலங்கு மறியேந்துவர், காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடையார், அடையார் புரம் செற்றவர்
செய்ய மேனிக் கரிய மிடற்றார், திருவாஞ்சியத்து
ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா வரு நோய்களே
(6)
அரவம் பூண்பர், அணியும் சிலம்பார்க்க அகந்தொறும்
இரவில் நல்லபலி பேணுவர், நாணிலர், நாமமே
பரவுவார் வினை தீர்க்க நின்றார், திருவாஞ்சியம்
மருவியேத்த மடமாதொடு நின்றஎம் மைந்தரே
(7)
விண்ணிலான பிறைசூடுவர் தாழ்ந்து விளங்கவே
கண்ணினால் அநங்கன் உடலம் பொடியாக்கினார்
பண்ணிலான இசைபாடல் மல்கும் திருவாஞ்சியத்து
அண்ணலார் தம்அடி போற்ற வல்லார்க்கில்லை அல்லலே
(8)
மாட நீடுகொடி மன்னிய தென்னிலங்கைக்கு மன்
வாடியூட வரையால் அடர்த்தன்றருள் செய்தவர்
வேட வேடர், திருவாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாடநீடு மனத்தார் வினை பற்றறுப்பார்களே
(9)
செடிகொள் நோயின் அடையார், திறம்பார் செறு தீவினை
கடிய கூற்றமும் கண்டகலும், புகல்தான் வரும்
நெடிய மாலொடயன் ஏத்த நின்றார் திருவாஞ்சியத்து
அடிகள் பாதமடைந்தார் அடியார் அடியார்கட்கே
(10)
பிண்டமுண்டு திரிவார், பிரியும் துவராடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்யல, பொய்யிலை எம்மிறை
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ்திரு வாஞ்சியத்து
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கில்லை அல்லலே
(11)
தென்றல் துன்றுபொழில் சென்றணையும் திருவாஞ்சியத்து
என்றும் நின்ற இறையானை உணர்ந்தடி ஏத்தலால்
நன்றுகாழி மறைஞான சம்பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம்உடையார அடைவார் உயர் வானமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page