வெண்ணி – சம்பந்தர் தேவாரம்:

<– வெண்ணி

(1)
சடையானைச், சந்திரனோடு செங்கண்அரா
உடையானை, உடைதலையில் பலி கொண்டூரும்
விடையானை, விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை அல்லது உள்காதெனதுள்ளமே
(2)
சோதியைச், சுண்ண வெண்ணீறணிந்திட்ட எம்
ஆதியை, ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை, வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே
(3)
கனிதனைக், கனிந்தவரைக் கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை, மூவுலகுக்கொரு மூர்த்தியை
நனிதனை, நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை ஏத்துவர் ஏதமிலாதாரே
(4)
மூத்தானை மூவுலகுக்கொரு மூர்த்தியாய்க்
காத்தானைக், கனிந்தவரைக் கலந்தாளாக
ஆர்த்தானை, அழகமர் வெண்ணி எம்மான் தன்னை
ஏத்தாதார் என்செய்வார் ஏழை அப்பேய்களே
(5)
நீரானை, நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத், தையலொர் பாகமும் உடையானைச்
சீரானைத், திகழ்தரு வெண்ணி அமர்ந்துறை
ஊரானை உள்கவல்லார் வினை ஓயுமே
(6)
முத்தினை, முழு வயிரத்திரள் மாணிக்கத்
தொத்தினைத், துளக்கமிலாத விளக்காய
வித்தினை, விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனை அடையவல்லார்க்கில்லை அல்லலே
(7)
காய்ந்தானைக் காமனையும், செறு காலனைப்
பாய்ந்தானைப், பரியகை மாஉரித்தோன் மெய்யில்
மேய்ந்தானை, விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல்லார் வினை நில்லாவே
(8)
மறுத்தானை மாமலையை மதியாதோடிச்
செறுத்தானைத் தேசழியத் திகழ் தோள்முடி
இறுத்தானை, எழிலமர் வெண்ணி எம்மான்எனப்
பொறுத்தானைப் போற்றுவார் ஆற்றலுடையாரே
(9)
மண்ணினை வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினைக், கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை, விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை அடையவல்லார்க்கில்லை அல்லலே
(10)
குண்டரும், குணமிலா தசமண் சாக்கிய
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்தவல்லார் துயர் தோன்றாவே
(11)
மருவாரு மல்குகாழித் திகழ் சம்பந்தன்
திருவாரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை
உருவாரும் ஒண்தமிழ் மாலையிவை வல்லார்
பொருவாகப் புக்கிருப்பார் புவலோகத்தே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page