(1)
தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியினாரும்
தூநீறு துதைந்திலங்கு மார்பினாரும்
புண்டரிகத்தயனொடு மால் காணா வண்ணம்
பொங்குதழல் பிழம்பாய புராணனாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலையாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்தனாரும்
விண்டவர்தம் புரமூன்றும் எரி செய்தாரும்
வெண்ணிஅமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
(2)
நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற்றாரும்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாலாரும்
பூந்துருத்தி நகர்மேய புராணனாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணியாரும்
வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும்
விருப்புடைய அடியவர்தம் உள்ளத்தாரும்
வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
(3)
கையுலாம் மூவிலை வேலேந்தினாரும்
கரிகாட்டில் எரியாடும் கடவுளாரும்
பையுலாம் நாகம் கொண்டாட்டுவாரும்
பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும்
செய்யுலாம் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
திருப்புன்கூர் மேவிய செல்வனாரும்
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்தாரும்
வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
(4)
சடையேறு புனல்வைத்த சதுரனாரும்
தக்கன்தன் பெருவேள்வி தடை செய்தாரும்
உடையேறு புலியதள்மேல் நாகம் கட்டி
உண்பலிக்கென்று ஊரூரில் உழிதர்வாரும்
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
மயிலாடுதுறை உறையும் மணாளனாரும்
விடையேறு வெல்கொடி எம் விமலனாரும்
வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
(5)
மண்ணிலங்கு நீரனல் கால் வானுமாகி
மற்றவற்றின் குணம்எலாமாய் நின்றாரும்
பண்ணிலங்கு பாடலோடு ஆடலாரும்
பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்
கண்ணிலங்கு நுதலாரும் கபாலமேந்திக்
கடைதோறும் பலிகொள்ளும் காட்சியாரும்
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணியாரும்
வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
(6)
வீடுதனை மெய்யடியார்க்கருள் செய்வாரும்
வேலைவிடம் உண்டிருண்ட கண்டத்தாரும்
கூடலர்தம் மூவெயிலும் எரிசெய்தாரும்
குரைகழலால் கூற்றுவனைக் குமை செய்தாரும்
ஆடும்அரவு அரைக்கசைத்து அங்காடுவாரும்
ஆலமர நீழலிருந்து அறம் சொன்னாரும்
வேடுவராய் மேல் விசயற்கருள் செய்தாரும்
வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
(7)
மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி
மடவாள் அவளோடு மானொன்றேந்திச்
சிட்டிலங்கு வேடத்தராகி நாளும்
சில்பலிக்கென்று ஊரூர் திரிதர்வாரும்
கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த
காலன்தன் காலம் அறுப்பார் தாமும்
விட்டிலங்கு வெண்குழைசேர் காதினாரும்
வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
(8)
செஞ்சடைக்கோர் வெண்திங்கள் சூடினாரும்
திருஆலவாய் உறையும் செல்வனாரும்
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத்தாரும்
ஆறங்கம் நால்வேதமாய் நின்றாரும்
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதில்ஆரூர் புக்கங்கே மன்னினாரும்
வெஞ்சினத்த வேழமது உரிசெய்தாரும்
வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
(9)
வளங்கிளர் மாமதிசூடும் வேணியாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்தனாரும்
களங்கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும்
கச்சிஏகம்பத்தெம் கடவுளாரும்
உளங்குளிர அமுதூறி அண்ணிப்பாரும்
உத்தமராய் எத்திசையும் மன்னினாரும்
விளங்கிளரும் வெண்மழு ஒன்றேந்தினாரும்
வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
(10)
பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்
புகலூரும் பூவணமும் பொருந்தினாரும்
கொன்னிலங்கு மூவிலை வேலேந்தினாரும்
குளிரார்ந்த செஞ்சடைஎம் குழகனாரும்
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்தும்
திருவிரலால் அடர்த்தவனுக்கருள் செய்தாரும்
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத்தாரும்
வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...