வெண்ணி – அப்பர் தேவாரம் (1):

<– வெண்ணி

(1)
முத்தினைப் பவளத்தை முளைத்தஎம்
தொத்தினைச், சுடரைச் சுடர் போல்ஒளிப்
பித்தனைக், கொலும் நஞ்சினை வானவர்
நித்தனை நெருல் கண்ட வெண்ணியே
(2)
வெண்ணித் தொல்நகர் மேய வெண் திங்களார்
கண்ணித்தொத்த சடையர், கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந்தேனுக்கு
அண்ணித்து இட்டமுதூறும் என் நாவுக்கே
(3)
காற்றினைக் கனலைக் கதிர் மாமணி
நீற்றினை, நினைப்பார் வினை நீக்கிடும்
கூற்றினை உதைத்திட்ட குணமுடை
வீற்றினை, நெருநல் கண்ட வெண்ணியே
(4)
நல்லனைத், திகழ் நான்மறை ஓதியைச்
சொல்லனைச், சுடரைச் சுடர் போலொளிர்
கல்லனைக், கடி மாமதில் மூன்றெய்த
வில்லனை, நெருநல் கண்ட வெண்ணியே
(5)
சுடரைப் போல்ஒளிர் சுண்ண வெண்ணீற்றனை
அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப்
படரும் செஞ்சடைப் பால்மதி சூடியை
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே
(6)
பூத நாதனைப் பூம்புகலூரனைத்
தாதெனத் தவழும் மதி சூடியை
நாதனை நல்ல நான்மறை ஓதியை
வேதனை நெருநல் கண்ட வெண்ணியே
(7)
ஒருத்தியை ஒரு பாகத்தடக்கியும்
பொருத்திய புனிதன் புரிபுன்சடைக்
கருத்தனைக், கறைக் கண்டனைக் கண்ணுதல்
நிருத்தனை, நெருநல் கண்ட வெண்ணியே
(8)
சடையனைச், சரி கோவண ஆடைகொண்டு
உடையனை, உணர்வார் வினை தீர்த்திடும்
படையனை, மழுவாளொடு பாய்தரும்
விடையனை நெருநல் கண்ட வெண்ணியே
(9)
பொருப்பனைப், புனலாளொடு புன்சடை
அருப்பனை, இளந்திங்கள் அங்கண்ணியான்
பருப்பதம் பரவித் தொழும் தொண்டர்கள்
விருப்பனை, நெருநல் கண்ட வெண்ணியே
(10)
சூல வஞ்சனை வல்லஎம் சுந்தரன்
கோலமா அருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச உதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே
(11)
இலையினார் கொன்றை சூடிய ஈசனார்
மலையினால் அரக்கன் திறல் வாட்டினார்
சிலையினால் மதிலெய்தவன் வெண்ணியைத்
தலையினால் தொழுவார் வினை தாவுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page