வெஞ்சமாக்கூடல்:

<– கொங்கு நாடு

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சுந்தரர் தேவாரம்):

(1)
எறிக்கும்கதிர் வேயுதிர் முத்தம்மோடு
    ஏலம் இலவங்கம் தக்கோலம்இஞ்சி
செறிக்கும் புனலுள் பெய்து கொண்டுமண்டித்
    திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்கும் தழை மாமுடப் புன்னைஞாழல்
    குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
(2)
குளங்கள் பலவும் குழியும் நிறையக்
    குடமாமணி சந்தனமும் அகிலும்
துளங்கும் புனலுள் பெய்து கொண்டுமண்டித்
    திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள்மதில் மாளிகை கோபுரமும்
    மணிமண்டபமும் இவை மஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக்கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
(3)
வரைமான் அனையார், மயிற்சாயல் நல்லார்
    வடிவேற்கண் நல்லார் பலர் வந்திறைஞ்சத்
திரையார் புனலுள் பெய்து கொண்டுமண்டித்
    திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாள் தெங்கும்
    குறுந்தாள் பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக்கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
(4)
பண்ணேர் மொழியாளைஒர் பங்குடையாய்
    படுகாட்டகத்தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார் அகிலும் நல சாமரையும்
    அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவும் குழலும் இயம்ப
    மடவார் நடமாடு மணியரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக்கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
(5)
துளை வெண்குழையும், சுருள் வெண்தோடும்
    தூங்கும் காதில் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க் கொன்றையினாய்
    கலந்தார்க்கருள் செய்திடும் கற்பகமே
பிளைவெண் பிறையாய், பிறங்குஞ் சடையாய்
    பிறவாதவனே பெறுதற்கரியாய்
வெளைமால் விடையாய், வெஞ்சமாக்கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
(6)
தொழுவார்க்கெளியாய், துயர்தீர நின்றாய்
    சுரும்பார் மலர்க் கொன்றை துன்றும் சடையாய்
உழுவார்க்கரிய விடையேறி, ஒன்னார்
    புரந்தீஎழ ஓடுவித்தாய், அழகார்
முழவாரொலி பாடலொடு ஆடலறா
    முதுகாடரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகின் வெஞ்சமாக்கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
(7)
கடமாகளி யானை உரித்தவனே
    கரிகாடிடமா அனல் வீசிநின்று
நடமாட வல்லாய், நரையேறுகந்தாய்
    நல்லாய், நறுங்கொன்றை நயந்தவனே
படமாயிரமாம் பருத்துத்திப் பைங்கண்
    பகுவாய் எயிற்றோடழலே உமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக்கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
(8)
காடும் மலையும் நாடும் இடறிக்
    கதிர்மாமணி சந்தனமும் அகிலும்
சேடன் உறையும் இடம்தான் விரும்பித்
    திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
பாடல் முழவும் குழலும் இயம்பப்
    பணைத்தோளியர் பாடலொடு ஆடலறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
(9)
கொங்கார் மலர்க் கொன்றையந் தாரவனே
    கொடுகொட்டிஒர் வீணை உடையவனே
பொங்காடரவும் புனலும் சடைமேல்
    பொதியும் புனிதா, புனம் சூழ்ந்தழகார்
துங்கார் புனலுள் பெய்து கொண்டு மண்டித்
    திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக்கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
(10)
வஞ்சி நுண்ணிடையார், மயிற்சாயல் அன்னார்
    வடிவேற்கண் நல்லார் பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக்கூடல் விகிர்தா, !அடியே
    னையும் வேண்டுதியே என்று தான் விரும்பி
வஞ்சியாதளிக்கும் வயல் நாவலர்கோன்
    வனப்பகை அப்பன் வன்தொண்டன் சொன்ன
செஞ்சொல் தமிழ்மாலைகள் பத்தும்வல்லார்
    சிவலோகத்திருப்பது திண்ணமன்றே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page