(1)
சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவதுடையார்
ஈகையார், கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்
தோகை மாமயிலனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூர் உளாரே
(2)
எண்ணில் ஈரமும் உடையார், எத்தனையோர் இவர்அறங்கள்
கண்ணும் ஆயிரமுடையார், கையுமொர் ஆயிரமுடையார்
பெண்ணும் ஆயிரமுடையார், பெருமையொர் ஆயிரமுடையார்
வண்ணம் ஆயிரமுடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே
(3)
நொடியொர் ஆயிரமுடையார், நுண்ணியராம் அவர் நோக்கும்
வடிவும் ஆயிரமுடையார், வண்ணமும் ஆயிரமுடையார்
முடியும் ஆயிரமுடையார், மொய் குழலாளையும் உடையார்
வடிவும் ஆயிரமுடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே
(4)
பஞ்சி நுண்துகிலன்ன பைங்கழல் சேவடி உடையார்
குஞ்சி மேகலை உடையார், கொந்தணி வேல்வலன் உடையார்
அஞ்சும் வென்றவர்க்கணியார், ஆனையின் ஈருரி உடையார்
வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
(5)
பரவுவாரையும் உடையார், பழித்திகழ்வாரையும் உடையார்
விரவுவாரையும் உடையார், வெண்தலைப் பலி கொள்வதுடையார்
அரவம் பூண்பதும் உடையார், ஆயிரம் பேர்மிக உடையார்
வரமும் ஆயிரம்உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
(6)
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார், கோலமும் பலபல உடையார்
கண்டு கோடலும் அரியார், காட்சியும் அரியதொர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே.
(7)
மான வாழ்க்கையது உடையார், மலைந்தவர் மதில் பரிசறுத்தார்
தான வாழ்க்கையது உடையார், தவத்தொடு நாம் புகழ்ந்தேத்த
ஞான வாழ்க்கையது உடையார், நள்ளிருள் மகளிர் நின்றேத்த
வான வாழ்க்கையது உடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே
(8)
ஏழு மூன்றுமொர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து
வேழ்வி செற்றதும், விரும்பி, விருப்பவர் பலபல உடையார்
கேழல் வெண்பிறையன்ன கெழுமணி மிடறு நின்றிலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
(9)
வென்றி மாமலரோனும், விரிகடல் துயின்றவன் தானும்
என்றும் ஏத்துகை உடையார், இமையவர் துதிசெய விரும்பி
முன்றின் மாமலர் வாச முதுமதி தவழ்பொழில் தில்லை
மன்றில் ஆடலதுடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே
(10)
மண்டை கொண்டுழல் தேரர், மாசுடை மேனி வன்சமணர்
குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளல்மின், திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச், சுண்ணவெண் பொடிஅணிந்தெங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே.
(11)
நலங்கொள் பூம்பொழில் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
வலங்கொள் வெண்மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தையராகி நன்னெறி எய்துவர் தாமே