வாழ்கொளிபுத்தூர் – சம்பந்தர் தேவாரம் (1)

<– வாழ்கொளிபுத்தூர்

 (1)
பொடியுடை மார்பினர்; போர் விடையேறிப் பூதகணம் புடைசூழக்
கொடியுடை ஊர்திரிந்து ஐயம் கொண்டு, பலபலகூறி
வடிவுடை வாள்நெடுங்கண் உமை பாகமாயவன், வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற்றான் அடி காண்போம்
(2)
அரைகெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவம் அசைத்து, ஐயம்
புரைகெழு வெண்தலைஏந்திப், போர் விடையேறிப் புகழ
வரைகெழு மங்கையது ஆகமொர் பாகமாயவன், வாழ்கொளிபுத்தூர்
விரைகமழ் மாமலர்தூவி விரிசடையான் அடி சேர்வோம்
(3)
பூணெடு நாகம் அசைத்து, அனலாடிப், புன்தலை அங்கையில்ஏந்தி
ஊணிடு பிச்சை, ஊர் ஐயம் உண்டி, என்று பலகூறி
வாள்நெடுங்கண் உமைமங்கையொர் பாகமாயவன், வாழ்கொளிபுத்தூர்த்
தாள்நெடு மாமலரிட்டுத் தலைவன் தாள்நிழல் சார்வோம்
(4)
தாரிடு கொன்றை ஓர்வெண்மதி கங்கை தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சைகொள் செல்வம் உண்டியென்று பலகூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகமாயவன், வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர்தூவிக் கறைமிடற்றானஅடி காண்போம்
(5)
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக், காதிலொர் வெண்குழையோடு
புனமலர் மாலை புனைந்து, ஊர் புகுதியென்றே பலகூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகமாயவன், வாழ்கொளிபுத்தூர்
இனமலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான்அடி சேர்வோம்
(6)
அளைவளர் நாகம் அசைத்து, அனலாடி, அலர்மிசை அந்தணன்உச்சிக்
களை தலையில் பலிகொள்ளும் கருத்தனே, கள்வனே, என்னா
வளையொலி முன்கை மடந்தையொர் பாகமாயவன், வாழ்கொளிபுத்தூர்த்
தளைஅவிழ் மாமலர்தூவித் தலைவன் தாளிணை சார்வோம்
(7)
அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து, வழிதலை அங்கையிலேந்தி
உடலிடு பிச்சையோடு, ஐயம் உண்டியென்று பலகூறி
மடனெடு மாமலர்க் கண்ணியொர் பாகமாயவன், வாழ்கொளிபுத்தூர்த்
தடமலராயின தூவித் தலைவன் தாள்நிழல் சார்வோம்
(8)
உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கைஅடர்த்து
அயலிடு பிச்சையோடு ஐயமார் தலையென்று அடி போற்றி
வயல்விரிநீல நெடுங்கணி பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்ச்
சயவிரி மாமலர்தூவித் தாழ்சடையான்அடி சார்வோம்
(9)
கரியவன் நான்முகன் கைதொழுதேத்தக் காணலும் சாரலும் ஆகா
எரியுருவாகி, ஊரை ஐயமிடு பலிஉண்ணி என்றேத்தி
வரிஅரவல்குல் மடந்தையொர் பாகமாயவன், வாழ்கொளிபுத்தூர்
விரிமலராயின தூவி விகிர்தன் சேவடி சேர்வோம்
(10)
குண்டமணர் துவர்க் கூறை கண்மெய்யில் கொள்கையினார் புறங்கூற
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகமாயவன், வாழ்கொளிபுத்தூர்த்
தொண்டர்கள் மாமலர்தூவத் தோன்றி நின்றான்அடி சேர்வோம்
(11)
கல்லுயர் மாக்கடல் நின்றுமுழங்கும் கரைபொரு காழியமூதூர்
நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர்கெடுதல் எளிதாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page