வலிவலம் – சுந்தரர் தேவாரம்:

<– வலிவலம்

(1)
ஊனங்கத்து உயிர்ப்பாய் உலகெல்லாம்
    ஓங்காரத்து உருவாகி நின்றானை
வானம் கைத்தவர்க்கும் அளப்பரிய
    வள்ளலை, அடியார்கள்தம் உள்ளத்
தேனம் கைத்தமுதாகி உள்ளூறும்
    தேசனைத், திளைத்தற்கினியானை
மானம் கைத்தலத்தேந்த வல்லானை
    வலிவலந்தனில் வந்து கண்டேனே
(2)
பல்லடியார் பணிக்குப் பரிவானைப்
    பாடி ஆடும் பத்தர்க்கு அன்புடையானைச்
செல்லடியே நெருங்கித் திறம்பாது
    சேர்ந்தவர்க்கே சித்திமுத்தி செய்வானை
நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை
    நான் உறுகுறை அறிந்தருள் புரிவானை
வல்லடியார் மனத்து இச்சையுளானை
    வலிவலந்தனில் வந்து கண்டேனே
(3)
ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை
    ஆதிஅந்தம் பணிவார்க்கணியானைக்
கூழையராகிப் பொய்யே குடியோம்பிக்
    குழைந்து மெய்யடியார் குழுப்பெய்யும்
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி
    மறுபிறப்பென்னை மாசறுத்தானை
மாழை ஒண்கண் உமையை மகிழ்ந்தானை
    வலிவலந்தனில் வந்து கண்டேனே
(4)
நாத்தான் தன்திறமே திறம்பாது
    நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்தூறும்
ஆத்தானை, அடியேன் தனக்கென்றும்
    அளவிறந்த பல்தேவர்கள் போற்றும்
சோத்தானைச், சுடர் மூன்றிலும் ஒன்றித்
    துருவி மால்பிரமன் அறியாத
மாத்தானை, மாத்தெனக்கு வைத்தானை
    வலிவலந்தனில் வந்து கண்டேனே
(5)
நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கு
    அரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானைத்
    தொண்டனேன் அறியாமை அறிந்து
கல்லியல் மனத்தைக் கசிவித்துக்
    கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்க நின்றானை
    வலிவலந்தனில் வந்து கண்டேனே
(6)
பாடுமா பாடிப் பணியுமாறறியேன்
    பனுவுமா பனுவிப் பரவுமாறறியேன்
தேடுமா தேடித் திருத்துமாறு அறியேன்
    செல்லுமா செல்லச் செலுத்துமாறு அறியேன்
கூடுமாறு எங்ஙனமோ என்று கூறக்
    குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு
வாடிநீ வாளா வருந்தல் என்பானை
    வலிவலந்தனில் வந்து கண்டேனே
(7)
பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்
    படுகடல் பரப்புத் தவிர்ப்பானைச்
சந்தித்த திறலால் பணி பூட்டித்
    தவத்தை ஈட்டிய தன்னடியார்க்குச்
சிந்தித்தற்கெளிதாய்த் திருப்பாதம்
    சிவலோகம் திறந்தேற்ற வல்லானை
வந்திப்பார் தம் மனத்தின் உள்ளானை
    வலிவலந்தனில் வந்து கண்டேனே
(8)
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர்
    எண்ணிறந்தார்கள் மற்றெங்கும் நின்றேத்த
அவ்வவர் வேண்டியதே அருள் செய்து
    அடைந்தவர்க்கே இடமாகி நின்றானை
இவ்விவ கருணைஎம் கற்பகக் கடலை
    எம்பெருமான் அருளாய் என்ற பின்னை
வவ்விஎன் ஆவிமனம் கலந்தானை
    வவிவலந்தனில் வந்து கண்டேனே
(9)
திரியும் முப்புரம் செற்றதும், குற்றத்
    திறல் அரக்கனைச் செறுத்ததும், மற்றைப்
பெரிய நஞ்சமுதுண்டதும், முற்றும்
    பின்னையாய் முன்னமே முளைத்தானை
அரிய நான்மறை அந்தணர் ஓவாது
    அடிபணிந்தறிதற்கரியானை
வரையின் பாவை மணாளன் எம்மானை
    வலிவலந்தனில் வந்து கண்டேனே
(10)
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
    நிறைக்க மால் உதிரத்தினை ஏற்றுத்
தோன்று தோள்மிசைக் களேபரம் தன்னைச்
    சுமந்த மாவிரதத்த கங்காளன்
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன்
    தன்னைத், தன்னிலா மனத்தார்க்கு
மான்று சென்று அணையாதவன் தன்னை
    வலிவலந்தனில் வந்து கண்டேனே
(11)
கலிவலம் கெட ஆரழல் ஓம்பும்
    கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
வலிவலந்தனில் வந்துகண்டு அடியேன்
    மன்னு நாவல் ஆரூரன் வன்தொண்டன்
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
    உள்ளத்தால் உகந்தேத்த வல்லார் போய்
மெலிவில் வானுலகத்தவர் ஏத்த
    விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page