(1)
பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி உமையவள்
மேவிய திருவுரு உடையவன் விரைமலர்
மாவியல் பொழில் வலிவல முறை இறையே
(2)
இட்டமதமர் பொடி இசைதலின் அசைபெறு
பட்டவிர் பவளநன் மணியென அணிபெறு
விட்டொளிர் திருவுரு உடையவன், விரைமலர்
மட்டமர் பொழில் வலிவல முறை இறையே
(3)
உருமலி கடல்கடை உழியுலகமர் உயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்களம் உடையவன், மிடைதரு
மருமலி பொழில் வலிவலம் முறை இறையே
(4)
அனல்நிகர் சடையழல் அவியுற எனவரு
புனல்நிகழ் அதுமதி நனைபொறி அரவமும்
என நினைவொடு வரும் இதுமெல முடிமிசை
மனமுடை அவர் வலிவல முறை இறையே
(5)
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலிவல முறை இறையே
(6)
தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழல் உமையொடு விரவது செய்து
நரைதிரை கெடு தகையது அருளினன், எழில்
வரைதிகழ் மதில் வலிவல முறை இறையே
(7)
நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவரல் இயர்மனை அதுபுகு
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
வலிவரு மதில் வலிவல முறை இறையே
(8)
இரவணன் இருபது கரமெழில் மலைதனில்
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
இரவணம் அமர்பெயர் அருளினன் அகநெதி
இரவண நிகர் வலிவல முறை இறையே
(9)
தேனமர் தருமலர் அணைபவன், வலிமிகும்
ஏனமதாய் நிலம்அகழ் அரி அடிமுடி
தான் அணையா உருஉடையவன், மிடைகொடி
வானணை மதில் வலிவல முறை இறையே
(10)
இலைமலி தரமிகு துவருடை அவர்களும்
நிலைமையில் உணலுடை அவர்களும் நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை உருவினன்
மலைமலி மதில் வலிவல முறை இறையே
(11)
மன்னிய வலிவல நகருறை இறைவனை
இன்னியல் கழுமல நகரிறை எழில்மறை
தன்னியல் கலைவல தமிழ் விரகனது உரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...