வலிவலம் – சம்பந்தர் தேவாரம் (2):

<– வலிவலம்

(1)
ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளமொழிந்து வெய்ய
சொல்லையாறித் தூய்மை செய்து காமவினை அகற்றி
நல்லவாறே உந்தன் நாமம் நாவில் நவின்றேத்த
வல்லவாறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே
(2)
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநல் தேவரெல்லாம்
பயங்களாலே பற்றி நின்பால் சித்தம் தெளிகின்றிலர்
தயங்குசோதீ, சாமவேதா, காமனைக் காய்ந்தவனே
மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே
(3)
பெண்டிர் மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை
விண்டு பண்டே வாழமாட்டேன், வேதனை நோய் நலியக்
கண்டுகண்டே உந்தன்நாமம் காதலிக்கின்றதுள்ளம்
வண்டு கிண்டிப் பாடும் சோலை வலிவலம் மேயவனே
(4)
மெய்யராகிப் பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே, தேவர்குலக் கொழுந்தே
நைவன் நாயேன் உந்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையமுன்னே வந்துநல்காய் வலிவலம் மேயவனே
(5)
துஞ்சும்போதும் துற்றும்போதும் சொல்லுவன் உன் திறமே
தஞ்சமில்லாத் தேவர் வந்துன் தாளிணைக் கீழ்ப் பணிய
நஞ்சை உண்டாய்க்கு என்செய்கேனோ, நாளும் நினைந்தடியேன்
வஞ்சம்உண்டென்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே
(6)
புரிசடையாய் புண்ணியனே, நண்ணலார் மூஎயிலும்
எரியவெய்தாய், எம்பெருமான் என்றிமையோர் பரவும்
கரியுரியாய், காலகாலா, நீலமணி மிடற்று
வரிஅரவா, வந்து நல்காய் வலிவலம் மேயவனே
(7)
தாயும்நீயே, தந்தைநீயே, சங்கரனே, அடியேன்
ஆயும் நின்பால் அன்புசெய்வான் ஆதரிக்கின்றதுள்ளம்
ஆயமாய காயம் தன்னுள் ஐவர்நின்று ஒன்றலொட்டார்
மாயமே என்றஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே
(8)
நீரொடுங்கும் செஞ்சடையாய் நின்னுடைய பொன் மலையை
வேரொடும் பீழ்ந்து ஏந்தலுற்ற வேந்தன் இராவணனைத்
தேரொடும் போய் வீழ்ந்தலறத் திருவிரலால் அடர்த்த
வாரொடுங்கும் கொங்கை பங்கா வலிவலம் மேயவனே
(9)
ஆதியாய நான்முகனும், மாலும் அறிவரிய
சோதியானே, நீதியில்லேன், சொல்லுவன் நின் திறமே
ஓதிநாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம்
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே
(10)
பொதியிலானே பூவணத்தாய், பொன்திகழும் கயிலைப்
பதியிலானே, பத்தர் சித்தம் பற்று விடாதவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்றிவர்கள்
மதியிலாதார் என்செய்வாரோ வலிவலம் மேயவனே
(11)
வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனைப்
பொன்னி நாடன் புகலிவேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன
பன்னுபாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி ஈசனோடே மன்னி இருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page