(1)
நல்லான் காண், நான்மறைகள் ஆயினான் காண்
நம்பன் காண், நணுகாதார் புர மூன்றெய்த
வில்லான் காண், விண்ணவர்க்கும் மேலானான் காண்
மெல்லியலாள் பாகன் காண், வேத வேள்விச்
சொல்லான் காண், சுடர்மூன்றும் ஆயினான் காண்
தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான் காண், வானவர்கள் வணங்கியேத்தும்
வலிவலத்தான் காண், அவனென் மனத்துளானே
(2)
ஊனவன் காண், உடல் தனக்கோர் உயிரானான் காண்
உள்ளவன் காண், இல்லவன் காண், உமையாட்கென்றும்
தேனவன் காண், திருஅவன் காண், திசையானான் காண்
தீர்த்தன் காண், பார்த்தன் தன் பணியைக் கண்ட
கானவன் காண், கடலவன் காண், மலையானான் காண்
களியானை ஈருரிவை கதறப் போர்த்த
வானவன் காண், வானவர்கள் வணங்கியேத்தும்
வலிவலத்தான் காண் அவனென் மனத்துளானே
(3)
ஏயவன் காண், எல்லார்க்கும் இயல்பானான் காண்
இன்பன் காண், துன்பங்கள் இல்லாதான் காண்
தாயவன் காண், உலகுக்கோர் தன்னொப்பில்லாத்
தத்துவன் காண், உத்தமன் காண், தானேயெங்கும்
ஆயவன் காண், அண்டத்துக்கப்பாலான் காண்
அகம் குழைந்து மெய்யரும்பி அழுவார் தங்கள்
வாயவன் காண், வானவர்கள் வணங்கியேத்தும்
வலிவலத்தான் காண் அவனென் மனத்துளானே
(4)
உய்த்தவன் காண், உடல் தனக்கோர் உயிரானான் காண்
ஓங்காரத்தொருவன் காண், உலகுக்கெல்லாம்
வித்தவன் காண், விண் பொழியும் மழையானான் காண்
விளைவவன் காண், விரும்பாதார் நெஞ்சத்தென்றும்
பொய்த்தவன் காண், பொழிலேழும் தாங்கினான் காண்
புனலோடு வளர்மதியும் பாம்பும் சென்னி
வைத்தவன் காண், வானவர்கள் வணங்கியேத்தும்
வலிவலத்தான் காண் அவனென் மனத்துளானே
(5)
கூற்றவன் காண், குணமவன் காண், குறியானான் காண்
குற்றங்கள் அனைத்தும் காண், கோலமாய
நீற்றவன் காண், நிழலவன் காண், நெருப்பானான் காண்
நிமிர்புன் சடை முடிமேல் நீரார் கங்கை
ஏற்றவன் காண், ஏழுலகும் ஆயினான் காண்
இமைப்பளவில் காமனைமுன் பொடியாய் வீழ
மாற்றவன் காண், வானவர்கள் வணங்கியேத்தும்
வலிவலத்தான் காண் அவனென் மனத்துளானே
(6)
நிலையவன் காண், தோற்றவன் காண், இறையானான் காண்
நீரவன் காண், பாரவன் காண், ஊர் மூன்றெய்த
சிலையவன் காண், செய்யவாய்க் கரிய கூந்தல்
தேன்மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண்
கலையவன் காண், காற்றவன் காண், காலன் வீழக்
கறுத்தவன் காண், கயிலாயம் என்னும் தெய்வ
மலையவன் காண், வானவர்கள் வணங்கியேத்தும்
வலிவலத்தான் காண் அவனென் மனத்துளானே
(7)
பெண்ணவன் காண், ஆணவன் காண், பெரியோர்க்கென்றும்
பெரியவன் காண், அரியவன் காண், அயனானான் காண்
எண்ணவன் காண், எழுத்தவன் காண், இன்பக் கேள்வி
இசையவன் காண், இயலவன் காண், எல்லாம் காணும்
கண்ணவன் காண், கருத்தவன் காண், கழிந்தோர் செல்லும்
கதியவன் காண், மதியவன் காண், கடலேழ் சூழ்ந்த
மண்ணவன் காண், வானவர்கள் வணங்கியேத்தும்
வலிவலத்தான் காண் அவனென் மனத்துளானே
(8)
முன்னவன் காண், பின்னவன் காண், மூவா மேனி
முதலவன் காண், முடிவவன் காண், மூன்று சோதி
அன்னவன் காண், அடியார்க்கும் அண்டத்தார்க்கும்
அணியவன் காண், சேயவன் காண், அளவில் சோதி
மின்னவன் காண், உருமவன் காண், திருமால் பாகம்
வேண்டினன் காண், நீண்டுபுனல் கங்கைக்கென்றும்
மன்னவன் காண், வானவர்கள் வணங்கியேத்தும்
வலிவலத்தான் காண் அவனென் மனத்துளானே
(9)
நெதியவன் காண், யாவர்க்கும் நினையவொண்ணா
நீதியன் காண், வேதியன் காண், நினைவார்க்கென்றும்
கதியவன் காண், காரவன் காண், கனலானான் காண்
காலங்கள் ஊழியாய்க் கலந்து நின்ற
பதியவன் காண், பழமவன் காண், இரதம் தான் காண்
பாம்போடு திங்கள் பயில வைத்த
மதியவன் காண், வானவர்கள் வணங்கியேத்தும்
வலிவலத்தான் காண் அவனென் மனத்துளானே
(10)
பங்கயத்தின் மேலானும் பாலனாகி
உலகளந்த படியானும் பரவிக் காணா
தங்கை வைத்த சென்னியராய் அளக்க மாட்டா
அனலவன் காண், அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
கொங்கலர்த்த முடிநெரிய விரலால் ஊன்றும்
குழகன் காண், அழகன் காண், கோலமாய
மங்கையர்க்கோர் கூறன் காண், வானோரேத்தும்
வலிவலத்தான் காண் அவனென் மனத்துளானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...