வட திருமுல்லைவாயில்:

<– தொண்டை நாடு

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சுந்தரர் தேவாரம்:

(1)
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்கள் என்றெண்ணி
ஒருவரை மதியாதுறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ் திருமுல்லை
வாயிலாய், வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே
(2)
கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா, அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய், திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே
(3)
விண் பணிந்தேத்தும் வேதியா, மாதர்
வெருவிட வேழம் அன்றுரித்தாய்
செண்பகச் சோலைசூழ் திருமுல்லை
வாயிலாய், தேவர்தம் அரசே
தண்பொழில் ஒற்றி மாநகருடையாய்
சங்கிலிக்கா என்கண் கொண்ட
பண்ப, நின்அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே
(4)
பொன்னலங்கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலம் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன் வந்துலவிட, அள்ளல்
செந்நெலங் கழனிசூழ் திருமுல்லை
வாயிலாய், திருப்புகழ் விருப்பால்
பன்னலம் தமிழால் பாடுவேற்கருளாய்
பாசுபதா பரஞ்சுடரே
(5)
சந்தன வேரும், காரகில் குறடும்
தண்மயில் பீலியும், கரியின்
தந்தமும், தரளக் குவைகளும், பவளக்
கொடிகளும் சுமந்து கொண்டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வாயிலாய், மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே
(6)
மற்றுநான் பெற்றதார் பெறவல்லார்
வள்ளலே, கள்ளமே பேசிக்
குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும்
கொள்கையால் மிகைபல செய்தேன்
செற்று மீதோடும் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய், அடியேன்
பற்றிலேன், உற்ற படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே
(7)
மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயில் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடலறாத
திணிபொழில் தழுவு திருமுல்லைவாயில்
செல்வனே, எல்லியும் பகலும்
பணியது செய்வேன், படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே
(8)
நம்பனே, அன்று வெண்ணெய் நல்லூரில்
நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவே, உம்பரார் தொழுதேத்தும்
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன் மாளிகைசூழ் திருமுல்லைவாயில்
தேடி யான் திரிதர்வேன், கண்ட
பைம்பொனே, அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே
(9)
மட்டுலா மலர் கொண்டடியிணை வணங்கும்
மாணி தன்மேல் மதியாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே, செல்வத் திருமுல்லைவாயில்
செல்வனே, செழுமறை பகர்ந்த
பட்டனே, அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே
(10)
சொல்லரும் புகழால் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்டு
அருளிய இறைவனே, என்றும்
நல்லவர் பரவும் திருமுல்லைவாயில்
நாதனே, நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே, படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே
(11)
விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்ட எம்மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லைவாயில்
செல்வனை நாவல் ஆரூரன்
உரைதரு மாலைஓர் அஞ்சினோடஞ்சும்
உள் குளிர்ந்தேத்த வல்லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க்கரசே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page