<– (மேலைத்)திருக்காட்டுப்பள்ளி
(1)
மாட்டுப்பள்ளி மகிழ்ந்துறைவீர்க்கெலாம்
கேட்டுப்பள்ளி கண்டீர், கெடுவீர்இது
ஓட்டுப்பள்ளி விட்டு ஓடலுறா முனம்
காட்டுப் பள்ளியுளான் கழல் சேர்மினே
(2)
மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியுளான் கழல் சேர்மினே
(3)
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும்
ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி
ஞான நாயகனைச்சென்று நண்ணுமே
(4)
அருத்தமும் மனையாளொடு மக்களும்
பொருத்தமில்லை, பொல்லாதது போக்கிடும்
கருத்தன், கண்ணுதல், அண்ணல், காட்டுப்பள்ளித்
திருத்தன் சேவடியைச் சென்று சேர்மினே
(5)
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும்
அற்றபோதணையார் அவர் என்றென்றே
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப்
பெற்றமேறும் பிரானடி சேர்மினே
(6)
அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதும் காட்டுப்பள்ளி
உடம்பினார்க்கோர் உறுதுணை ஆகுமே
(7)
மெய்யின் மாசுடையார் உடல் மூடுவார்
பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்
கையில் மானுடையான் காட்டுப்பள்ளிஎம்
ஐயன் தன்னடியே அடைந்து உய்ம்மினே
(8)
வேலை வென்ற கண்ணாரை விரும்பிநீர்
சீலம் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை
நீல கண்டனை நித்தல் நினைமினே
(9)
இன்றுளார் நாளை இல்லை எனும்பொருள்
ஒன்றும் ஓராதுழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க்காக விடமுண்ட
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே
(10)
எண்ணிலா அரக்கன் மலை ஏந்திட
எண்ணி நீள்முடி பத்தும் இறுத்தவன்
கண்ணுளார் கருதும் காட்டுப்பள்ளியை
நண்ணுவார் அவர்தம் வினை நாசமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...