<– (மேலைத்)திருக்காட்டுப்பள்ளி
(1)
வாரு மன்னும் முலை மங்கையோர் பங்கினன்
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நீருமன்னும் சடை நிமலர்தம் நீர்மையே
(2)
நிருத்தனார்; நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார்; கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
அருத்தனார்; அழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார்; கழலிணை போற்றுதல் பொருளதே
(3)
பண்ணினார்; அருமறை பாடினார்; நெற்றியோர்
கண்ணினார்; கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
விண்ணினார்; விரிபுனல் மேவினார்; சடைமுடி
அண்ணலார் எம்மை ஆளுடைய எம்அடிகளே
(4)
பணங்கொள் நாகம் அரைக்கார்ப்பது, பல்பலி
உணங்கலோடு உண்கலன், உறைவது காட்டிடைக்
கணங்கள் கூடித் தொழுதேத்து காட்டுப்பள்ளி
நிணங்கொள் சூலப்படை நிமலர்தம் நீர்மையே
(5)
வரையுலாம் சந்தொடு வந்திழி காவிரிக்
கரையுலாம் இடுமணல் சூழ்ந்த காட்டுப்பள்ளித்
திரையுலாம் கங்கையும் திங்களும் சூடியங்கு
அரையுலாம் கோவணத்தடிகள் வேடங்களே
(6)
வேதனார்; வெண்மழு ஏந்தினார்; அங்கமுன்
ஓதினார்; உமையொரு கூறனார்; ஒண்குழைக்
காதினார்; கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும் நின்றேத்துமே
(7)
மையினார் மிடறனார்; மான் மழுவேந்திய
கையினார்; கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளித்
தையலோர் பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார்; அடிதொழ அல்லல் ஒன்றில்லையே
(8)
சிலைதனால் முப்புரம் செற்றவன் சீரினார்
மலைதனால் வல்லரக்கன் வலி வாட்டினான்
கலைதனார் புறவணி மல்கு காட்டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவமதாகுமே
(9)
செங்கண்மால், திகழ்தரு மலருறை திசைமுகன்
தங்கையால் தொழுதெழத் தழலுரு ஆயினான்
கங்கையார் சடையினான் கருது காட்டுப்பள்ளி
அங்கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்றில்லையே
(10)
போதியார் பிண்டியார் என்றவப் பொய்யர்கள்
வாதினால் உரையவை மெய்யல, வைகலும்
காரினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
ஏரினால் தொழுதெழ இன்பம் வந்தெய்துமே
(11)
பொருபுனல் புடையணி புறவ நன்னகர் மன்னன்
அருமறை அவைவல்ல அணிகொள் சம்பந்தன் சொல்
கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி
பரவிய தமிழ்சொல்லப் பறையும் மெய்ப் பாவமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...