மூக்கீச்சுரம் (மூக்கீச்சரம்):

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
சாந்தம் வெண்ணீறெனப் பூசி வெள்ளம் சடை வைத்தவர்
காந்தளாரும் விரல்ஏழையொடு ஆடிய காரணம்
ஆய்ந்து கொண்டாங்கறிய நிறைந்தார் அவர் ஆர்கொலோ?
வேந்தன் மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே
(2)
வெண்தலைஓர் கலனாப் பலிதேர்ந்து, விரிசடைக்
கொண்டலாரும் புனல்சேர்த்து, உமையாளொடும், கூட்டமா
விண்டவர்தம் மதிலெய்தபின், வேனில்வேள் வெந்தெழக்
கண்டவர், மூக்கீச்சரத்தெம்அடிகள் செய் கன்மமே
(3)
மருவலார்தம் மதிலெய்ததுவும், மால் மதலையை
உருவிலார எரியூட்டியதும், உலகுண்டதால்
செருவிலாரும் புலி செங்கயல்ஆனையினான் செய்த
பொருவின் மூக்கீச்சரத்தெம்அடிகள் செயும் பூசலே
(4)
அன்னமன்ன நடைச் சாயலாளோடு அழகெய்தவே
மின்னையன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம்
தென்னன்கோழி எழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன், மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே
(5)
விடமுனார அழல்வாயதோர் பாம்பரை வீக்கியே
நடமுனார அழலாடுவர் பேயொடு நள்ளிருள்
வடமன் நீடுபுகழ்ப் பூழியன் தென்னவன் கோழிமன்
அடல்மன் மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றதோர் அச்சமே
(6)
வெந்தநீறு மெய்யில் பூசுவர், ஆடுவர் வீங்கிருள்
வந்தென்ஆரவ்வளை கொள்வதும் இங்கொரு மாயமாம்
அந்தண்மா மானதன் நேரியன் செம்பியன்ஆக்கிய
எந்தை மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றதோர் ஏதமே
(7)
அரையிலாரும் கலைஇல்லவன், ஆணொடு பெண்ணுமாய்
உரையிலார அழலாடுவர் ஒன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதில் மூன்றுடன் வெவ்வழல் ஆக்கினான்
அரையன் மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றதோர் அச்சமே
(8)
ஈர்க்கும்நீர்ச் செஞ்சடைக்கு ஏற்றதும், கூற்றை உதைத்ததும்
கூர்க்குநல் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும்
ஆர்க்கும் வாயான் அரக்கன் உரத்தை நெரித்த அடல்
மூர்க்கன் மூக்கீச்சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே
(9)
நீருளாரும் மலர்மேல் உறைவான், நெடுமாலுமாய்ச்
சீருளாரும் கழல்தேட மெய்த் தீத்திரளாயினான்
சீரினால் அங்கொளிர் தென்னவன் செம்பியன் வில்லவன்
சேரு மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே
(10)
வெண்புலால் மார்பிடு துகிலினர், வெற்றரை உழல்பவர்
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனமதாக்கினான்
ஒண்புலால் வேல் மிகவல்லவன், ஓங்கெழில் கிள்ளிசேர்
பண்பின் மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே
(11)
மல்லையார் மும்முடி மன்னர் மூக்கீச்சரத்தடிகளைச்
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன
சொல்ல வல்லார் அவர் வானுலகாளவும் வல்லரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page