மயிலாடுதுறை – அப்பர் தேவாரம்:

<– மயிலாடுதுறை

(1)
கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல்வளை
உள்ளம்உள்கி உரைக்கும் திருப்பெயர்
வள்ளல் மாமயிலாடு துறையுறை
வெள்ளந்தாங்கு சடையனை வேண்டியே
(2)
சித்தந்தேறும் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பால்மதி
வைத்த மாமயிலாடுதுறை அரன்
கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே
(3)
அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக்கும் கருத்தொன்றிலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே
(4)
வெஞ்சினக் கடுங்காலன் விரைகிலான்
அஞ்சிறப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயிலாடுதுறை உறை
அஞ்சொலாள் உமை பங்கன் அருளிலே
(5)
குறைவில் ஓங்கொடு மாநுட வாழ்க்கையால்
கறை நிலாவிய கண்டன், எண் தோளினன்
மறைவலான், மயிலாடுதுறை உறை
இறைவன் நீள் கழலேத்தி இருக்கிலே
(6)
நிலைமை சொல்லு நெஞ்சே தவமென் செய்தாய்
கலைகள் ஆயவல்லான், கயிலாயநன்
மலையன், மாமயிலாடுதுறையன் நம்
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே.
(7)
நீற்றினான், நிமிர் புன்சடையான், விடை
ஏற்றினான், நமை ஆளுடையான், புலன்
மாற்றினான், மயிலாடுதுறை என்று
போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே
(8)
கோலும் புல்லும் ஒருகையில் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரமுற்றென் பயன்
நீல மாமயிலாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்கட்கே.
(9)
பணங்கொள் ஆடரவு அல்குல் பகீரதி
மணங்கொளச் சடைவைத்த மறையவன்
வணங்கு மாமயிலாடுதுறை அரன்
அணங்கொர் பால்கொண்ட கோலம் அழகிதே
(10)
நீணிலா அரவச்சடை நேசனைப்
பேணிலாதவர் பேதுற ஓட்டினோம்
வாணிலா மயிலாடுதுறை தனைக்
காணிலார்க்கும் கடுந்துயர் இல்லையே
(11)
பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தினான், அவன் இன்னிசை கேட்டலும்
வரத்தினான், மயிலாடுதுறை தொழும்
கரத்தினார் வினைக் கட்டறும் காண்மினே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page