பொதுத் திருப்பதிகங்கள்: அப்பர் தேவாரம் (4):

<– பொதுத் திருப்பதிகங்கள்

(1)
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே
(2)
பூவினுக்கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கருங்கலம் அரன்அஞ்சாடுதல்
கோவினுக்கருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே
(3)
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே
(4)
இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளில் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே
(5)
வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்
அந்தணர்க்கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கருங்கலம் திகழு நீள்முடி
நங்களுக்கருங்கலம் நமச்சிவாயவே
(6)
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால்
நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலன்
குலமிலராகிலும் குலத்துக்கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே
(7)
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச் சென்றுருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே
(8)
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே
(9)
முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங்கடைந்தவர்க்கெலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே
(10)
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்தவல்லார் தமக்கிடுக்கண் இல்லையே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page