(1)
அண்ணாவும் கழுக்குன்று மாயமலை அவைவாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள்செய்வார்
கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரமெரித்த
பெண்ஆணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
(2)
கருமானின் உரியுடையர், கரிகாடர், இமவானார்
மருமானார் இவரென்று மடவாளோடுடனாவர்
பொருமான விடையூர்வதுடையார், வெண் பொடிப்பூசும்
பெருமானார், பிஞ்ஞகனார், பெருவேளூர் பிரியாரே
(3)
குணக்கும், தென்திசைக்கண்ணும், குடபாலும் வடபாலும்
கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் மொழிந்தோர்க்கும்
வணக்கஞ்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும்
பிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
(4)
இறைக்கொண்ட வளையாளோடு இருகூறாய் ஒருகூறு
மறைக் கண்டத்திறை நாவர், மதிலெய்த சிலை வலவர்
கறைக்கொண்ட மிடறுடையர், கனல்கிளரும் சடைமுடிமேல்
பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே
(5)
விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசிக்
குழையாதார் குழைவார்போல் குணநல்ல பலகூறி
அழையாவும் அரற்றாவும் அடிவீழ்வார் தமக்கென்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே
(6)
விரித்தார் நான்மறைப் பொருளை, உமையஞ்ச விறல் வேழம்
உரித்தாராம், உரிபோர்த்து மதில்மூன்றும் ஒருகணையால்
எரித்தாராம் இமைப்பளவில், இமையோர்கள் தொழுதிறைஞ்சப்
பெருத்தார்எம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
(7)
மறப்பிலா அடிமைக்கண் மனம்வைப்பார் தமக்கெல்லாம்
சிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லார் ஒருகணையால்
இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றும் கேடிலார்
பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
(8)
எரியார்வேல் கடல்தானை இலங்கைக்கோன் தனைவீழ
முரியார்ந்த தடந்தோள்கள் அடர்த்துகந்த முதலாளர்
வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை ஒருபாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே
(9)
சேணியலும் நெடுமாலும் திசைமுகனும் செருவெய்திக்
காணியல்பை அறிவிலராய்க் கனல்வண்ணர் அடியிணைக்கீழ்
நாணியவர் தொழுதேத்த நாணாமே அருள்செய்து
பேணியஎம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
(10)
புற்றேறி உணங்குவார், புகையார்ந்த துகில் போர்ப்பார்
சொல்தேற வேண்டாநீர், தொழுமின்கள் சுடர்வண்ணம்
மற்றேரும் பரிமாவும் மதகளிறும் இவையொழியப்
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
(11)
பைம்பொன்சீர் மணிவாரிப் பலவும்சேர் கனிஉந்தி
அம்பொன்செய் மடவரலார் அணிமல்கு பெருவேளூர்
நம்பன்தன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கருவினை நோய் சாராவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...