(1)
மறையணி நாவினானை, மறப்பிலார் மனத்துளானைக்
கறையணி கண்டன் தன்னைக், கனலெரி ஆடினானைப்
பிறையணி சடையினானைப், பெருவேளூர் பேணினானை
நறையணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்குவேனே
(2)
நாதனாய் உலகமெல்லாம் நம்பிரான் எனவும் நின்ற
பாதனாம் பரமயோகி, பலபல திறத்தினாலும்
பேதனாய்த் தோன்றினானைப், பெருவேளூர் பேணினானை
ஓதநா உடையனாகி உரைக்குமாறு உரைக்குற்றேனே
(3)
குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும்
நறவிள நறுமென் கூந்தல் நங்கையோர் பாகத்தானைப்
பிறவியை மாற்றுவானைப் பெருவேளூர் பேணினானை
உறவினால் வல்லனாகி உணருமாறுணர்த்துவேனே
(4)
மைஞ்ஞவில் கண்டன் தன்னை, வலங்கையில் மழுவொன்றேந்திக்
கைஞ்ஞவின் மானினோடும் கனலெரி ஆடினானைப்
பிஞ்ஞகன் தன்னை, அந்தண் பெருவேளூர் பேணினானைப்
பிஞ்ஞகனை நினைய மாட்டாப் பொறியிலா அறிவிலேனே
(5)
ஓடைசேர் நெற்றியானை, உரிவையை மூடினானை
வீடதே காட்டுவானை, வேத நான்காயினானைப்
பேடைசேர் புறவ நீங்காப் பெருவேளூர் பேணினானைக்
கூடநான் வல்ல மாற்றம் குறுகுமாறறிகிலேனே
(6)
கச்சைசேர் நாகத்தானைக், கடல்விடம் கண்டத்தானைக்
கச்சியே கம்பன் தன்னைக், கனலெரி ஆடுவானைப்
பிச்சை சேர்ந்துழல்வினானைப், பெருவேளூர் பேணினானை
இச்சை சேர்ந்தமர நானும் இறைஞ்சுமாறு இறைஞ்சுவேனே
(7)
சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள்
முத்தனை மூர்த்தியாய முதல்வனை முழுதுமாய
பித்தனைப் பிறரும் ஏத்தப் பெருவேளூர் பேணினானை
மெத்த நேயவனை நாளும் விரும்புமாறறிகிலேனே
(8)
முண்டமே தாங்கினானை, முற்றிய ஞானத்தானை
வண்டுலாம் கொன்றை மாலை வளர்மதிக் கண்ணியானைப்
பிண்டமே ஆயினானைப், பெருவேளூர் பேணினானை
அண்டமா ஆதியானை அறியுமாறறிகிலேனே
(9)
விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கேற்றதாகும்
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை
மருவிநான் வாழ்த்தி உய்யும் வகையது நினைக்கின்றேனே
(10)
பொருகடல் இலங்கை மன்னன் உடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத்தானைக், கதிரிளம் கொழுந்து சூடும்
பெருகிய சடையினானைப், பெருவேளூர் பேணினானை
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...