புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) – அப்பர் தேவாரம் (1):

<– புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

(1)
வெள்ளெருக்கரவம் விரவும் சடைப்
புள்ளிருக்குவேளூர் அரன் பொற்கழல்
உள்ளிருக்கும் உணர்ச்சியில்லாதவர்
நள்ளிருப்பர் நரகக் குழியிலே
(2)
மாற்றம் ஒன்றறியீர், மனை வாழ்க்கை போய்க்
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லீரேல் புள்ளிருக்குவேளூர்
சீற்றமாயின தேய்ந்தறும் காண்மினே
(3)
அருமறையனை ஆணொடு பெண்ணனைக்
கருவிடம் மிகஉண்ட எம்கண்டனைப்
புரிவெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர்
உருகி நைபவர் உள்ளம் குளிருமே
(4)
தன்னுருவை ஒருவர்க்கறிவொணா
மின்னுருவனை, மேனி வெண்நீற்றனைப்
பொன்னுருவனைப், புள்ளிருக்கு வேளூர்
என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே
(5)
செங்கண் மால் பிரமற்கும் அறிவொணா
அங்கியின் உருவாகி அழல்வதோர்
பொங்கரவனைப் புள்ளிருக்கு வேளூர்
மங்கைபாகனை வாழ்த்த வரும்இன்பே
(6)
குற்றமில்லியைக் கோலச் சிலையினால்
செற்றவர் புரம் செந்தழலாக்கியைப்
புற்றரவனைப் புள்ளிருக்கு வேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே
(7)
கையினோடு கால் கட்டி உமரெலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர்
பொய்யிலா அரன் புள்ளிருக்கு வேளூர்
மையுலாவிய கண்டனை வாழ்த்துமே
(8)
உள்ளமுள்கி உகந்து சிவனென்று
மெள்ள உள்க வினைகெடு மெய்ம்மையே
புள்ளினார் பணி புள்ளிருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே
(9)
(10)
அரக்கனார் தலை பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்பனார் உறை புள்ளிருக்கு வேளூர்
விருப்பினால் தொழுவார் வினை வீடுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page