கலந்து நின்னடியாரோடன்று
வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
புகுந்து நின்ற(து)இடர் பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
ஆர்வங் கூர அடியேற்கே
(2)
அடியார் சிலர்உன் அருள்பெற்றார்
ஆர்வங் கூர யான்அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடுவினையைக்
களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
ஓவாதுருக அருளாயே
(3)
அருளார் அமுதப் பெருங்கடல்வாய்
அடியாரெல்லாம் புக்கழுந்த
இருளார் ஆக்கை இதுபொறுத்தே
எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன்
வருமால் என்றிங்கெனைக் கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை
உடையாய் பெறநான் வேண்டுமே
(4)
வேண்டும் வேண்டு !மெய்யடியா
ருள்ளே விரும்பி எனைஅருளால்
ஆண்டாய், அடியேன் இடர்களைந்த
அமுதே – அருமாமணி முத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய்
தொண்டனேற்கும் உண்டாங் கொல்
வேண்டாதொன்றும் வேண்டாது
மிக்க அன்பே மேவுதலே
(5)
மேவும் உன்றன் அடியாருள்
விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள்
பங்கா – உன்றன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ?
பரமானந்தப் பழங்கடல் சேர்ந்து
ஆவி யாக்கை யான் எனதென்(று)
யாதுமின்றி அறுதலே
(6)
அறவே பெற்றார் நின்அன்பர்
அந்தமின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன்
புலம்புகின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு
பேரா ஒழியாப் பிரிவில்லா
மறவா நினையா அளவிலா
மாளா இன்ப மாகடலே
(7)
கடலே அனைய ஆனந்தம்
கண்டார் எல்லாங் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி !ஏசற்றிங்
கிருத்தல் அழகோ அடிநாயேன்
உடையாய் நீயே அருளுதி !என்
றுணர்த்தாதொழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச்
சோதீ இனித்தான் துணியாயே
(8)
துணியா உருகா அருள்பெருகத்
தோன்றுந் தொண்டரிடைப் புகுந்து
திணியார் மூங்கிற் சிந்தையேன்
சிவனே நின்று தேய்கின்றேன்
அணியார் அடியார் உனக்குள்ள
அன்புந் தாராய், அருள்அளியத்
தணியாதொல்லை வந்தருளித்
தளிர்பொற் பாதந் தாராயே
(9)
தாரா அருள் ஒன்றின்றியே
தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும்
அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத்
திருத்தி ஆண்ட சிவலோகா
பேரானந்தம் பேராமை
வைக்க வேண்டும் பெருமானே
(10)
மானோர் பங்கா வந்திப்பார்
மதுரக் கனியே மனநெகா
நானோர் தோளாச் சுரையொத்தால்
நம்பி இத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனையுணர்ந்தே
உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளுங் காலந்தான்
கொடியேற்கென்றோ கூடுவதே
(11)
கூடிக் கூடி உன்னடியார்
குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
வாடி வாடி வழியற்றேன்
வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உடையாயொடு
கலந்துள் உருகிப் பெருகிநெக்கு
ஆடி ஆடி ஆனந்தம்
அதுவேயாக அருள் கலந்தே
