பாதாளீச்சரம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான், புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம்அன நடையாள் ஒரு பாகத்தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே
(2)
நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி, வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல குழையான், சுடுநீற்றான்
ஆடரவம் பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலினான், இனியான் உறைகோயில் பாதாளே
(3)
நாகமும் வான்மதியும் நலமல்கு செஞ்சடையான், சாமம்
போகநல் வில்வரையால் புரமூன்று எரித்துகந்தான்
தோகைநன் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே
(4)
அங்கமும் நான்மறையும் அருள்செய்து, அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான், மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளும் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே
(5)
பேய்பலவும் நிலவப் பெருங்காடரங்காக உன்னிநின்று
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறையும் அரவும் பொலிகொன்றைச் சடைதன்மேல் சேரப்
பாய் புனலும் உடையான் உறைகோயில் பாதாளே
(6)
கண்ணமர் நெற்றியினான், கமழ்கொன்றைச் சடைதன்மேல் நன்று
விண்இயல் மாமதியும் உடன் வைத்தவன், விரும்பும்
பெண்ணமர் மேனியினான், பெருங்காடு அரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே
(7)
விண்டலர் மத்தமொடு மிளிரும் இளநாகம் வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர்தம் புரமூன்று எரிசெய், உரை வேதநான்கும் அவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே
(8)
மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
தொல்லை மலையெடுத்த அரக்கன் தலைதோள் நெரித்தான்
கொல்லை விடையுகந்தான், குளிர்திங்கள் சடைக்கணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே
(9)
தாமரை மேல்அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடிக்
காமனை வீடுவித்தான் கழல் காண்பிலராய் அகன்றார்
பூமருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமருவும் குணத்தான் உறைகோயில் பாதாளே
(10)
காலையில் உண்பவரும், சமண்கையரும் கட்டுரை விட்டன்று
ஆலவிடம் நுகர்ந்தான், அவன்தன் அடியே பரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண்டு இசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே
(11)
பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியல் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்திருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page