பழையாறை வடதளி:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்
நிலையினால் மறைத்தால் மறைக்கொண்ணுமே
அலையினார் பொழிலாறை வடதளி
நிலையினான் அடியே நினைந்துய்ம்மினே
(2)
மூக்கினால் முரன்றோதி அக்குண்டிகை
தூக்கினார் குலம் தூரறுத்தே தனக்கு
ஆக்கினான் அணியாறை வடதளி
நோக்கினார்க்கு இல்லையால் அருநோய்களே
(3)
குண்டரைக் குணமில்லரைக் கூறையில்
மிண்டரைத் துரந்த விமலன் தனை
அண்டரைப், பழையாறை வடதளிக்
கண்டரைத் தொழுதுய்ந்தன கைகளே
(4)
முடையரைத் தலை முண்டிக்கும் மொட்டரைக்
கடையரைக் கடிந்தார், கனல் வெண்மழுப்
படையரைப், பழையாறை வடதளி
உடையரைக் குளிர்ந்துள்குமென் உள்ளமே
(5)
ஒள்ளரிக் கணார் முன்அமண் நின்றுணும்
கள்ளரைக் கடிந்த கருப்பூறலை
அள்ளலம் புனலாறை வடதளி
வள்ளலைப் புகழத் துயர் வாடுமே
(6)
நீதியைக் கெட நின்றமணே உணும்
சாதியைக் கெடுமா செய்த சங்கரன்
ஆதியைப் பழையாறை வடதளிச்
சோதியைத் தொழுவார் துயர் தீருமே
(7)
திரட்டிரைக் கவளம் திணிக்கும் சமண்
பிரட்டரைப் பிரித்த பெருமான் தனை
அருள் திறத்தணியாறை வடதளித்
தெருட்டரைத் தொழத் தீவினை தீருமே
(8)
ஓதினத்தெழுத்தஞ்சு உணராச் சமண்
வேதினைப் படுத்தானை, வெங்கூற்றுதை
பாதனைப், பழையாறை வடதளி
நாதனைத் தொழ நம்வினை நாசமே
(9)
வாய் இருந்தமிழே படித்து ஆளுறா
ஆயிரம் சமணும் அழிவாக்கினான்
பாயிரும் புனலாறை வடதளி
மேயவன் என வல்வினை வீடுமே
(10)
செருத்தனைச் செயும் சேணரக்கன் உடல்
எருத்திற, விரலால் இறையூன்றிய
அருத்தனைப், பழையாறை வடதளித்
திருத்தனைத் தொழுவார் வினை தேயுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page