பரிதிநியமம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில் வெண்ணீறுபூசிப், பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொடுஏர் கவர்ந்த கள்வர்க்கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே
(2)
அரவொலி வில்லொலி அம்பினொலி அடங்கார் புரமூன்றும்
நிரவவல்லார், நிமிர்புன் சடைமேல் நிரம்பா மதிசூடி
இரவில் புகுந்தென் எழில்கவர்ந்த இறைவர்க்கிடம் போலும்
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிந் நியமமே
(3)
வாண்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதஞ்ச
நீள்முகமாகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து
நாண்முகம் காட்டி நலங்கவர்ந்த நாதர்க்கிடம்போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே
(4)
வெஞ்சுரம் சேர் விளையாடல் பேணி, விரிபுன் சடைதாழத்
துஞ்சிருள் மாலையும் நண்பகலும் துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும்பார் குழல்சோர உள்ளம்  கவர்ந்தார்க்கிடம் போலும்
பஞ்சுரம் பாடிவண்டு யாழ்முரலும் பரிதிந் நியமமே
(5)
நீர்புல்கு புன்சடை நின்றிலங்க, நெடுவெண் மதிசூடித்
தார்புல்கு மார்பில் வெண்ணீறணிந்து, தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க்கிடம் போலும்
பார்புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதிந் நியமமே
(6)
வெங்கடும் காட்டகத்தாடல் பேணி, விரிபுன் சடைதாழத்
திங்கள் திருமுடிமேல் விளங்கத் திசையார் பலிதேர்வார்
சங்கொடு சாயல் எழில்கவர்ந்த சைவர்க்கிடம் போலும்
பைங்கொடி முல்லை படர்புறவில் பரிதிந் நியமமே
(7)
பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடி வெண்ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க்கிடம்போலும்
பறையொலி சங்கொலியால் விளங்கும் பரிதிந் நியமமே
(8)
ஆசடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்தேத்த
மாசடையாத வெண்ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கிடம் போலும்
பாசடைத் தாமரை வைகு பொய்கைப் பரிதிந் நியமமே
(9)
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்தேத்தக்
கூடலர், ஆடலராகி நாளும் குழகர் பலிதேர்வார்
ஏடலர், சோர எழில்கவர்ந்த இறைவர்க்கிடம்போலும்
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிந் நியமமே
(10)
கல்வளர் ஆடையர் கையிலுண்ணும் கழுக்கள் இழுக்கான
சொல் வளமாக நினைக்க வேண்டா, சுடுநீறது ஆடி
நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க்கிடம் போலும்
பல்வளர் முல்லையம் கொல்லை வேலிப் பரிதிந் நியமமே
(11)
பையரவம் விரி காந்தள் விம்மு பரிதி நியமத்துத்
தையலொர் பாகம் அமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்தேத்த
ஐயுறவில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page