பந்தணைநல்லூர் – சம்பந்தர் தேவாரம்:

<– பந்தணைநல்லூர்

(1)
இடறினார் கூற்றைப், பொடிசெய்தார் மதிலை, இவைசொல்லி உலகெழுந்தேத்தக்
கடறினார் ஆவர், காற்றுளார்ஆவர், காதலித்துறை தரு கோயில்
கொடிறனார், யாதும் குறைவிலார், தாம்போய்க் கோவணம் கொண்டு கூத்தாடும்
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(2)
கழியுளார் எனவும், கடலுளார் எனவும், காட்டுளார் நாட்டுளார் எனவும்
வழியுளார் எனவும், மலையுளார் எனவும், மண்ணுளார் விண்ணுளார் எனவும்
சுழியுளார் எனவும் சுவடுதாம் அறியார், தொண்டர்வாய் வந்தனம் சொல்லும்
பழியுளார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(3)
காட்டினார் எனவும், நாட்டினார் எனவும், கடுந்தொழில் காலனைக் காலால்
வீட்டினார் எனவும், சாந்த வெண்ணீறு பூசியோர் வெண்மதி சடைமேல்
சூட்டினார் எனவும், சுவடுதாம் அறியார், சொல்லுள சொல்லும் நால்வேதப்
பாட்டினார் போலும், பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(4)
முருகினார் பொழில்சூழ் உலகினார்ஏத்த, மொய்த்தபல் கணங்களின் துயர்கண்டு
உருகினாராகி, உறுதி போந்துள்ளம் ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
கருகினார் எல்லாம் கைதொழுதேத்தக், கடலுள் நஞ்சமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தணை நல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(5)
பொன்னினார் கொன்றை இருவடம் கிடந்து, பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவ மேவு, வெண்ணீறு மெய்பூசித்
துன்னினார் நால்வர்க்கறம் அமர்ந்தருளித், தொன்மையார், தோற்றமும் கேடும்
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(6)
ஒண்பொனார் அனைய அண்ணல் வாழ்கெனவும், உமையவள் கணவன் வாழ்கெனவும்
அண்பினார் பிரியார், அல்லுநன் பகலும் அடியவர் அடியிணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லர் என்றேத்த, அல்லவர் தீயர் என்றேத்தும்
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(7)
எற்றினார் ஏதுமிடை கொள்வாரில்லை இருநிலம் வானுலகெல்லை
தெற்றினார் தங்கள் காரணமாகச் செருமலைந்து அடியிணை சேர்வான்
முற்றினார் வாழும் மும்மதில் வேவ மூவிலைச் சூலமும் மழுவும்
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(8)
ஒலிசெய்த குழலின் முழவமது இயம்ப, ஓசையால் ஆடலறாத
கலிசெய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும், அரக்கன்
வலிகொள்வர், புலியின் உரிகொள்வர், ஏனை வாழ்வு நன்றானுமோர் தலையில்
பலிகொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(9)
சேற்றினார் பொய்கைத் தாமரையானும், செங்கண்மால் இவரிரு கூறாத்
தோற்றினார், தோற்றத் தொன்மையை அறியார், துணைமையும் பெருமையும் தம்மில்
சாற்றினார், சாற்றி ஆற்றலோம் என்னச் சரண்கொடுத்தவர் செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(10)
(11)
கல்லிசை பூணக் கலையொலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்
நல்லிசையாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம்பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலையேந்தி மேவிய பந்தணைநல்லூர்
சொல்லிய பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page