(1)
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்பாய
நனையும் சடைமேலோர் நகுவெண் தலைசூடி
வினையில் அடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையும் கடல்நாகைக் காரோணத்தானே
(2)
பெண்ஆண் எனநின்ற பெம்மான், பிறைச்சென்னி
அண்ணாமலை நாடன், ஆரூருறை அம்மான்
மண்ணார் முழவோவா மாடம் நெடுவீதிக்
கண்ணார் கடல்நாகைக் காரோணத்தானே
(3)
பாரோர் தொழ, விண்ணோர் பணி அம்மதில் மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க்கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோணத்தானே
(4)
மொழிசூழ் மறைபாடி முதிரும் சடைதன்மேல்
அழிசூழ் புனலேற்ற அண்ணல் அணியாய
பழி சூழ்விலராய பத்தர் பணிந்தேத்தக்
கழிசூழ் கடல்நாகைக் காரோணத்தானே
(5)
ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள்நல்கிச்
சேணின்றவர்க்கு இன்னம் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியாதெழும் தொண்டர்
காணும் கடல்நாகைக் காரோணத்தானே
(6)
ஏனத்தெயிறோடும் அரவ மெய்பூண்டு
வானத்திளம் திங்கள் வளரும் சடைஅண்ணல்
ஞானத்துரை வல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானல் கடல்நாகைக் காரோணத்தானே
(7)
அரையார் அழல்நாகம் அக்கோடசைத்திட்டு
விரையார் வரைமார்பின் வெண்ணீறணி அண்ணல்
வரையார்வன போல வளரும் வங்கங்கள்
கரையார் கடல்நாகைக் காரோணத்தானே
(8)
வலங்கொள் புகழ்பேணி வரையால் உயர்திண்தோள்
இலங்கைக்கிறை வாட அடர்த்தங்கருள் செய்தான்
பலங்கொள் புகழ்மண்ணில் பத்தர் பணிந்தேத்தக்
கலங்கொள் கடல்நாகைக் காரோணத்தானே
(9)
திருமால் அடிவீழத், திசை நான்முகனேத்தப்
பெருமான் எனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
செருமால் விடையூரும் செல்வன் திரைசூழ்ந்த
கருமால் கடல்நாகைக் காரோணத்தானே
(10)
நல்லார் அறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லார் அலர்தூற்ற அடியார்க்கருள் செய்வான்
பல்லார் தலைமாலை அணிவான், பணிந்தேத்தக்
கல்லார் கடல்நாகைக் காரோணத்தானே
(11)
கரையார் கடல்நாகைக் காரோணம் மேய
நரையார் விடையானை நவிலும் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடும் அவரெல்லாம்
கரையா உருவாகிக் கலிவான் அடைவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...