(1)
வடிவுடை மாமலை மங்கை பங்கா, கங்கை வார்சடையாய்
கடிகமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே
பிடிமத வாரணம், பேணும் துரக நிற்கப், பெரிய
இடிகுரல் வெள்ளெருதேறும் இதென்னைகொல் எம்இறையே
(2)
கற்றார் பயில் கடல்நாகைக் காரோணத்தெம் கண்ணுதலே
வில்தாங்கிய கரம் வேள்நெடுங்கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித்த கரம் நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவகம் என்னை கொல் செப்புமினே
(3)
தூமென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக்காரோண நின்
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்
சாமன்று உரைக்கத் தருதி கண்டாய் எங்கள் சங்கரனே
(4)
பழிவழி ஓடிய பாவிப் பறிதலைக் குண்டர் தங்கள்
மொழி வழியோடி முடிவேன், முடியாமைக் காத்துக்கொண்டாய்
கழிவழி ஓதமுலவு கடல்நாகைக்காரோண என்
வழிவழி ஆளாகும் வண்ணம் அருள்எங்கள் வானவனே
(5)
செந்துவர் வாய்க் கருங்கண்ணிணை வெண்ணகைத் தேன்மொழியார்
வந்து வலஞ்செய்து மாநடமாட, மலிந்த செல்வக்
கந்த மலிபொழில் சூழ்கடல்நாகைக்காரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாதிருக்கும் திருமங்கையே
(6)
பனைபுரை கைம்மத யானை உரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்காரோணத்தெம் கண்ணுதலே
மனைதுறந்தல் உணா வல்லமண் குண்டர் மயக்க நீக்கி
எனைநினைந்து ஆட்கொண்டாய்க்கு என்னினி யான்செயும் இச்சைகளே
(7)
சீர்மலி செல்வம் பெரிதுடைய செம்பொன் மாமலையே
கார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனே
வார்மலி மென்முலையார் பலிவந்திடச் சென்றிரந்து
ஊர்மலி பிச்சை கொடுண்பது மாதிமையோ உரையே
(8)
வங்க மலிகடல் நாகைக்காரோணத்தெம் வானவனே
எங்கள் பெருமானொர் விண்ணப்பம் உண்டது கேட்டருளீர்
கங்கை சடையுள் கரந்தாய், அக்கள்ளத்தை மெள்ளஉமை
நங்கை அறியிற் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே
(9)
…
(10)
கருந்தடம் கண்ணியும் தானும் கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை என்றிறைஞ்சாது அன்றெடுக்கலுற்றான்
பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்தலற
இருந்தருளிச் செய்ததே மற்றுச் செய்திலன் எம்இறையே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...