நாகைக்காரோணம் – அப்பர் தேவாரம் (1):

<– நாகைக்காரோணம்

(1)
மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றமென்னும்
வினையுளே விழுந்தழுந்தி வேதனைக்கு இடமாகாதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீராகில் உய்யலா நெஞ்சினீரே
(2)
வையனை, வையமுண்ட மாலங்கம் தோள்மேல் கொண்ட
செய்யனைச், செய்ய போதில் திசைமுகன் சிரமொன்றேந்தும்
கையனைக், கடல்சூழ் நாகைக்காரோணம் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்தவாறே
(3)
நிருத்தனை, நிமலன் தன்னை, நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை, வேத வித்தை விளைபொருள் மூலமான
கருத்தனைக், கடல்சூழ் நாகைக்காரோணம் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்தலால் நான் உய்ந்தவா நெஞ்சினீரே
(4)
மண்தனை இரந்து கொண்ட மாயனோடு, அசுரர் வானோர்
தெண்திரை கடைய வந்த தீவிடம் தன்னையுண்ட
கண்டனைக், கடல்சூழ் நாகைக்காரோணம் கோயில் கொண்ட
அண்டனை, நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்தவாறே
(5)
நிறைபுனல் அணிந்த சென்னி, நீணிலா அரவம் சூடி
மறையொலி பாடியாடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக்காரோணம் கோயில் கொண்ட
இறைவனை நாளும்ஏத்த இடும்பைபோய் இன்பமாமே
(6)
வெம்பனைக் கருங்கை யானை வெருவ அன்றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த காலனை; ஞாலமேத்தும்
உம்பனை; உம்பர் கோனை; நாகைக்காரோணம் மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ண நாம் உய்ந்தவாறே
(7)
வெங்கடும் கானத்தேழை தன்னொடும் வேடனாய்ச்சென்று
அங்கமர் மலைந்து பார்த்தற்கு அடுசரம் அருளினானை
மங்கைமார் ஆடல்ஓவா மன்னு காரோணத்தானைக்
கங்குலும் பகலும் காணப் பெற்றுநாம் களித்தவாறே
(8)
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழவோர் அம்பால்
செற்றவெஞ் சிலையர், வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார்
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதியேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே
(9)
கருமலி கடல்சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து
ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண்திறல் அரக்கன் உக்கான்
இருதிற மங்கை மாரோடு எம்பிரான் செம்பொனாகம்
திருவடி தரித்து நிற்கத் திண்ணநாம் உய்ந்தவாறே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page