(1)
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்
பூணத்தான் அரவாமை பொறுத்தவன்
காணத்தான் இனியான் கடல் !நாகைக்கா
ரோணத்தான் என நம்வினை ஓயுமே
(2)
வண்டலம்பிய வார்சடை ஈசனை
விண்தலம் பணிந்தேத்தும் விகிர்தனைக்
கண்டலங்கமழ் நாகைக் காரோணனைக்
கண்டலும் வினையான கழலுமே
(3)
புனையும் மாமலர் கொண்டு புரிசடை
நனையும் மாமலர் சூடிய நம்பனைக்
கனையும் வார்கடல் நாகைக் காரோணனை
நினையவே வினையாயின நீங்குமே
(4)
கொல்லை மால் விடையேறிய கோவினை
எல்லி மாநடமாடும் இறைவனைக்
கல்லினார் மதில் நாகைக் காரோணனைச்
சொல்லவே வினையானவை சோருமே
(5)
மெய்யனை விடையூர்தியை, வெண்மழுக்
கையனைக், கடல் நாகைக் காரோணனை
மையனுக்கிய கண்டனை, வானவர்
ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே
(6)
அலங்கல் சேர்சடை ஆதி புராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல் நாகைக் காரோணனை
வலங்கொள்வார் வினையாயின மாயுமே
(7)
சினம்கொள் மால்கரி சீறிய ஏறினை
இனம்கொள் வானவர் ஏத்திய ஈசனைக்
கனங்கொள் மாமதில் நாகைக் காரோணனை
மனங்கொள்வார் வினையாயின மாயுமே
(8)
அந்தமில் புகழ் ஆயிழையார் பணிந்து
எந்தை ஈசன் என்றேத்தும் இறைவனைக்
கந்தவார் பொழில் நாகைக் காரோணனைச்
சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே
(9)
கருவனைக், கடல் நாகைக் காரோணனை
இருவருக்கு அறிவொண்ணா இறைவனை
ஒருவனை, உணரார் புர மூன்றெய்த
செருவனைத் தொழத் தீவினை தீருமே
(10)
கடல் கழிதழி நாகைக் காரோணன் தன்
வடவரை எடுத்தார்த்த அரக்கனை
அடர ஊன்றிய பாதம் அணைதரத்
தொடர அஞ்சும் துயக்கறும் காலனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...