தென்குரங்காடுதுறை – சம்பந்தர் தேவாரம்:

<– தென்குரங்காடுதுறை

(1)
பரவக் கெடும் வல்வினை, பாரிடம்சூழ
இரவில் புறங்காட்டிடை நின்று எரியாடி
அரவச்சடை அந்தணன் மேய அழகார்
குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே
(2)
விண்டார் புரமூன்றும் எரித்த விமலன்
இண்டார் புறங்காட்டிடை நின்று எரியாடி
வண்டார் கருமென்குழல் மங்கையொர் பாகம்
கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே
(3)
நிறைவில் புறங்காட்டிடை நேரிழையோடும்
இறைவில் எரியான் மழுவேந்தி நின்றாடி
மறையின் ஒலி வானவர் தானவரேத்தும்
குறைவில்லவன் ஊர் குரங்காடு துறையே
(4)
விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடித்
தெழிக்கும் புறங்காட்டிடைச் சேர்ந்து எரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந்தவன் ஊர், பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே
(5)
நீறார்தரு மேனியன், நெற்றியொர் கண்ணன்
ஏறார் கொடிஎம் இறை ஈண்டு எரியாடி
ஆறார் சடை அந்தணன், ஆயிழையாளோர்
கூறான் நகர்போல் குரங்காடு துறையே
(6)
நளிரும் மலர்க் கொன்றையும் நாறு கரந்தைத்
துளிரும் சுலவிச் சுடுகாட்டெரியாடி
மிளிரும் அரவார்த்தவன் மேய கோயில்
குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே
(7)
பழகும் வினை தீர்ப்பவன், பார்ப்பதியோடும்
முழவம் குழல் மொந்தை முழங்க எரியாடும்
அழகன், அயில் மூவிலைவேல் வலனேந்தும்
குழகன் நகர்போல் குரங்காடு துறையே
(8)
வரையார்த்தெடுத்த அரக்கன் வலிஒல்க
நிரையார் விரலான் எரித்திட்டவன் ஊராம்
கரையார்ந்திழி காவிரிக் கோலக்கரை மேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே
(9)
நெடியானொடு நான்முகனும் நினைவொண்ணாப்
படியாகிய பண்டங்கன் நின்று எரியாடி
செடியார் தலையேந்திய செங்கண் வெள்ளேற்றின்
கொடியான் நகர்போல் குரங்காடு துறையே
(10)
துவராடையர் வேடமலாச் சமண்கையர்
கவர்வாய் மொழி காதல் செய்யாதவன் ஊராம்
நவையார் மணிபொன் அகில் சந்தனம் உந்திக்
குவையார் கரைசேர் குரங்காடு துறையே
(11)
நல்லார் பயில் காழியுண் ஞானசம்பந்தன்
கொல்லேறுடையான் குரங்காடு துறைமேல்
சொல்லார் தமிழ்மாலை பத்தும் தொழுதேத்த
வல்லார் அவர் வானவரோடுறைவாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page