தென்குரங்காடுதுறை – அப்பர் தேவாரம்:

<– தென்குரங்காடுதுறை

(1)
இரங்கா வன்மனத்தார்கள் இயங்கு முப்
புரம் காவல் அழியப் பொடியாக்கினான்
தரங்காடும் தடநீர்ப் பொன்னித் தென்கரைக்
குரங்காடுதுறைக் கோலக் கபாலியே
(2)
முத்தினை மணியைப் பவளத்தொளிர்
தொத்தினைச் சுடர்ச்சோதியைச், சோலைசூழ்
கொத்தலர் குரங்காடு துறையுறை
அத்தன்என்ன அண்ணித்து இட்டிருந்ததே
(3)
குளிர்புனல் குரங்காடு துறையனைத்
தளிர்நிறத் தையல் பங்கனைத், தண்மதி
ஒளியனை, நினைந்தேனுக்கென் உள்ளமும்
தெளிவினைத் தெளியத் தெளிந்திட்டதே
(4)
மணவன் காண், மலையாள் நெடு மங்கலக்
கணவன் காண், கலை ஞானிகள் காதல்எண்
குணவன் காண், குரங்காடு துறைதனில்
அணவன் காண் அன்பு செய்யும் அடியர்க்கே
(5)
ஞாலத்தார் தொழுதேத்திய நன்மையன்
காலத்தால் உயிர் போக்கிய காலினன்
நீலத்தார் மிடற்றான், வெள்ளை நீறணி
கோலத்தால் குரங்காடு துறையனே
(6)
ஆட்டினான் முன் அமணரோடு எந்தனைப்
பாட்டினான் தன் பொன்னடிக்கின்னிசை
வீட்டினான் வினை, மெய்யடியாரொடும்
கூட்டினான் குரங்காடு துறையனே
(7)
மாத்தன் தான், மறையார் முறையால் மறை
ஓத்தன், தாரகன் தன்னுயிர் உண்ட பெண்
போத்தன், தானவன் பொங்கு சினம்தணி
கூத்தன் தான் குரங்காடுதுறையனே
(8)
நாடிநம் தமராயின தொண்டர்காள்
ஆடுமின் அழுமின் தொழுமின், அடி
பாடுமின், பரமன் பயிலும் இடம்
கூடுமின், குரங்காடு துறையையே
(9)
தென்றல் நன்னெடும் தேருடையான் உடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்
அன்றந்தகனை அயில் சூலத்தால்
கொன்றவன் குரங்காடு துறையனே
(10)
நற்றவம் செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழியால் அருள் செய்தநல்
கொற்றவன். குரங்காடு துறை தொழப்
பற்றும் தீவினையாயின பாறுமே
(11)
கடுத்ததோர் அரக்கன் கயிலைம்மலை
எடுத்த தோள்தலை இற்றலற விரல்
அடுத்தலும், அவன் இன்னிசை கேட்டருள்
கொடுத்தவன் குரங்காடு துறையனே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page