தில்லை – சம்பந்தர் தேவாரம் (2):

(1)
ஆடினாய் நறு நெய்யொடு பால்தயிர், அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா, நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும், பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாய், அருளாய் சுருங்கஎம் தொல்வினையே
(2)
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய், எருதேறினாய், நுதல்
பட்டமே புனைவாய், இசை பாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய், மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்
இட்டமா உறைவாய், இவை மேவியதென்னை கொலோ
(3)
நீலத்தார் கரிய மிடற்றார், நல்ல நெற்றி மேலுற்ற கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப்பொடி நீறணிவார், சடையார்
சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம் சேர்தலால் கழற்சேவடி கைதொழக்
கோலத்தாய் அருளாய் உன் காரணம் கூறுதுமே
(4)
கொம்பலைத்தழகெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போல முகத்திரண்டு
அம்பலைத்த கண்ணாள் முலைமேவிய வார்சடையான்
கம்பலைத்தெழு காமுறு காளையர் காதலால் கழற்சேவடி கைதொழ
அம்பலத்துறைவான் அடியார்க்கடையா வினையே
(5)
தொல்லையார் அமுதுண்ண நஞ்சுண்டதோர் தூமணி மிடறா, பகுவாயதோர்
பல்லையார் தலையில் பலி ஏற்றுழல் பண்டரங்கா
தில்லையார் தொழுதேத்து சிற்றம்பலம் சேர்தலால் கழற்சேவடி கைதொழ
இல்லையாம் வினை தான், எரியம்மதில் எய்தவனே
(6)
ஆகந்தோய் அணி கொன்றையாய், அனல் அங்கையாய், அமரர்க்கமரா, உமை
பாகந்தோய் பகவா, பலியேற்றுழல் பண்டரங்கா
மாகந்தோய் பொழில்மல்கு சிற்றம்பலம் மன்னினாய், மழுவாளினாய், அழல்
நாகந்தோய் அரையாய், அடியாரை நண்ணா வினையே
(7)
சாதியார் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார்குழையாய், திகழப்படும்
வேதியா, விகிர்தா, விழவாரணி தில்லை தன்னுள்
ஆதியாய்க்கிடமாய சிற்றம்பலம் அங்கையால் தொழவல்ல அடியார்களை
வாதியாதகலும், நலியா மலி தீவினையே
(8)
வேயினார் பணைத் தோளியொடு ஆடலை வேண்டினாய், விகிர்தா, உயிர்கட்கமுது
ஆயினாய், இடுகாட்டெரியாடல் அமர்ந்தவனே
தீயினார் கணையால் புரம் மூன்றெய்த செம்மையாய், திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய், கழலே தொழுதெய்துதும் மேலுலகே
(9)
தாரினார் விரி கொன்றையாய், மதிதாங்கு நீள் சடையாய், தலைவா, நல்ல
தேரினார் மறுகின் திருவாரணி தில்லை தன்னுள்
சீரினால் வழிபாடு ஒழியாததோர் செம்மையால் அழகாய சிற்றம்பலம்
ஏரினால் அமர்ந்தாய், உன சீரடி ஏத்துதுமே
(10)
வெற்றரை உழல்வார், துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளல்மின்
மற்றவர் உலகின் அவலமவை மாற்றகில்லார்
கற்றவர் தொழுதேத்து சிற்றம்பலம் காதலால் கழற்சேவடி கைதொழ
உற்றவர் உலகில் உறுதிகொள வல்லவரே
(11)
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன்
ஊறும் இன்தமிழால் உயர்ந்தார் உறை தில்லை தன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்து சிற்றம்பலத்தீசனை இசையால் சொன்ன பத்திவை
கூறுமாறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page