திருவொற்றியூர் – சுந்தரர் தேவாரம் (1):

(1)
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே
(2)
பந்தும் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள் இறைவர்க்கிடம் போல்
உந்தும் திரைவாய் ஒற்றியூரே
(3)
பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற்கிடம் போல்
உகளும் திரைவாய் ஒற்றியூரே
(4)
என்னதெழிலும் நிறையும் கவர்வான்
புன்னை மலரும் புறவில் திகழும்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றியூரே
(5)
பணங்கொள் அரவம் பற்றி பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றியூரே
(6)
படையார் மழுவன்; பால்வெண்ணீற்றன்
விடையார் கொடியன், வேத நாவன்
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றியூரே
(7)
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன், வினையை வீட்ட
நன்று நல்ல நாதன், நரைஏறு
ஒன்றை உடையான் ஒற்றியூரே
(8)
கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவும் திரைவாய் ஒற்றியூரே
(9)
பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றும் திரைவாய் ஒற்றியூரே
(10)
ஒற்றியூரும் அரவும் பிறையும்
பற்றியூரும் பவளச் சடையான்
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page