திருவொற்றியூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருவொற்றியூர்

(1)

விடையவன், விண்ணு மண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள்
படையவன், பாய்புலித் தோல் உடை, கோவணம், பல்கரந்தைச்
சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்கவெண்தோடு
உடையவன், ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே
(2)
பாரிடம் பாணி செய்யப், பறைக்கண் செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடலாடல் இலயம் சிதையாத கொள்கைத்
தாரிடும் போர்விடையன், தலைவன், தலையே கலனா
ஊரிடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே
(3)
விளிதரு நீருமண்ணும் விசும்போடு அனல் காலுமாகி
அளிதரு பேரருளான், அரனாகிய ஆதிமூர்த்தி
களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த
ஒளிதரு வெண்பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே
(4)
அரவமே கச்சதாக அசைத்தான், அலர் கொன்றையந்தார்
விரவி வெண்ணூல் கிடந்த விரையார் வரை மார்பன், எந்தை
பரவுவார் பாவமெல்லாம் பறைத்துப் படர்புன் சடைமேல்
உரவுநீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே
(5)
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து, நல்ல
பலகினார் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசிநீர்கொண்டடிமேல் அலரிட்டு முட்டாது
உலகினார் ஏத்தநின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
(6)
கமையொடு நின்றசீரான் கழலும் சிலம்பும் ஒலிப்பச்
சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும்
அமையொடு நீண்டதிண்தோள் அழகாய பொற்தோடிலங்க
உமையொடும் கூடிநின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
(7)
நன்றியால் வாழ்வதுள்ளம் உலகுக்கொரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலும் கருமால் வரையே சிலையாப்
பொன்றினார், வார் சுடலைப்பொடி நீறணிந்தார், அழலம்பு
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே
(8)
பெற்றியால் பித்தன் ஒப்பான், பெருமான், கருமான் உரிதோல்
சுற்றியான், சுத்தி சூலம் சுடர்க்கண்ணும் தன்மேல் விளங்கத்
தெற்றியால் செற்றரக்கன் உடலைச் செழுமால் வரைக்கீழ்
ஒற்றியான், முற்றும்ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே
(9)
திருவினார் போதினானும், திருமாலும்ஒர் தெய்வம்உன்னித்
தெரிவினால் காணமாட்டார், திகழ் சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே
(10)
தோகையம் பீலிகொள்வார், துவர்க் கூறைகள் போர்த்துழல்வார்
ஆகமச் செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக்
கூகைஅம்மாக்கள் சொல்லைக் குறிக் கொள்ளன்மின், ஏழுலகும்
ஓகை தந்தாள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே
(11)
ஒண்பிறை மல்குசென்னி இறைவன் உறை ஒற்றியூரைச்
சண்பையர் தம்தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
பண்புனை பாடல் பத்தும் பரவிப் பணிந்தேத்த வல்லார்
விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page