திருவொற்றியூர் – அப்பர் தேவாரம் (5):

<– திருவொற்றியூர்

(1)
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீதன் தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டில், மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியுமாகும் ஒற்றியூர் உடைய கோவே
(2)
வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா, வானவர் இறைவன் நின்று
புசிப்பதோர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடமதாகி
உசிர்ப்பெனும் உணர்வும் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே
(3)
தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீர்
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள் வல்லீராகில்
ஞானத்தை விளக்கையேற்றி நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே
(4)
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே
சாமத்து வேதமாகி நின்றதோர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடையிராவும் ஏகாந்தம் இயம்புவார்க்கு
ஓமத்துள் ஒளியதாகும் ஒற்றியூர் உடைய கோவே
(5)
சமைய மேலாறுமாகித், தானொரு சயம்புவாகி
இமையவர் பரவியேத்த இனிதின் அங்கிருந்த ஈசன்
கமையினை உடையராகிக் கழலடி பரவுவார்க்கு
உமையொரு பாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே
(6)
ஒருத்திதன் தலைச்சென்றாளைக் கரந்திட்டான் உலகமேத்த
ஒருத்திக்கு நல்லனாகி மறுப்படுத்தொளித்து மீண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான் உணர்வினால் ஐயமுண்ணி
ஒருத்திக்கு நல்லனல்லன் ஒற்றியூர் உடைய கோவே
(7)
பிணமுடை உடலுக்காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சின் உள்ளான் நினைக்குமா நினைக்கின்றாருக்கு
உணர்வினோடிருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே
(8)
பின்னுவார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்
துன்னுவார் நரகம் தன்னுள் தொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைகளோதி மனத்தினுள் விளக்கொன்றேற்றி
உன்னுவார் உள்ளத்துள்ளார் ஒற்றியூர் உடைய கோவே
(9)
முள்குவார் போகம் வேண்டில் முயற்றியால் இடர்கள் வந்தால்
எள்குவார் எள்கி நின்றங்கிதுவொரு மாயம் என்பார்
பள்குவார் பத்தராகிப் பாடியும் ஆடி நின்றும்
உள்குவார் உள்ளத்துள்ளார் ஒற்றியூர் உடைய கோவே
(10)
வெறுத்துகப் புலன்கள்ஐந்தும் வேண்டிற்று வேண்டு நெஞ்சே
மறுத்துக ஆர்வச் செற்றக் குரோதங்களான மாயப்
பொறுத்துகப் புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்துகந்தருள்கள் செய்தார் ஒற்றியூர் உடைய கோவே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page