திருவையாறு – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருவையாறு

(1)
பணிந்தவர் அருவினை பற்றறுத்தருள் செயத்
துணிந்தவன், தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேரெழில்ஆமை கொண்டு
அணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
(2)
கீர்த்தி மிக்கவன் நகர் கிளரொளியுடன் அடப்
பார்த்தவன், பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி, புலியதள் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
(3)
வரிந்த வெஞ்சிலை பிடித்தவுணர்தம் வளநகர்
எரிந்தற எய்தவன், எழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
(4)
வாய்ந்த வல்லவுணர் தம் வளநகர் எரியிடை
மாய்ந்தற எய்தவன், வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன், தொல்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
(5)
வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர்  அந்தண் ஐயாறே
(6)
முன்பனை முனிவரோடமரர்கள் அடிதொழும்
இன்பனை, இணையில இறைவனை, எழில்திகழ்
என்பொனை, ஏதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநகர்  அந்தண் ஐயாறே
(7)
வன்திறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற எய்தவன், விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகமதாகி தன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே
(8)
விடைத்த வல்லரக்கன் நல்வெற்பினை எடுத்தலும்
அடித்தலத்தால் இறைஊன்றி மற்றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
(9)
விண்ணவர் தம்மொடு வெங்கதிரோன், நல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபடக்
கண்ணனும் பிரமனும் காண்பரிதாகிய
அண்ணல்தன் வளநகர்  அந்தண் ஐயாறே
(10)
மருளுடை மனத்து வன்சமணர்கள், மாசறா
இருளுடை இணைத் துவர்ப் போர்வையினார்களும்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை அடிகள்தம் அந்தண் ஐயாறே
(11)
நலமலி ஞானசம்பந்தன் தின்தமிழ்
அலைமலி புனல்மல்கும் அந்தண் ஐயாற்றினைக்
கலைமலி தமிழிவை கற்றுவல்லார் மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page