திருவையாறு – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருவையாறு

(1)
கலையார் மதியோடு உரநீரும்
நிலையார் சடையார் இடமாகும்
மலையாரமும் மாமணி சந்தோடு
அலையார் புனல்சேரும் ஐயாறே
(2)
மதியொன்றிய கொன்றை வடத்தான்
மதியொன்ற உதைத்தவர் வாழ்வு
மதியின்னொடு சேர் கொடிமாடம்
மதியம் பயில்கின்ற ஐயாறே
(3)
கொக்கின் இறகின்னொடு வன்னி
புக்க சடையார்க்கிடமாகும்
திக்கின்இசை தேவர் வணங்கும்
அக்கின் அரையார் அது ஐயாறே
(4)
சிறை கொண்ட புரமவை சிந்தக்
கறை கொண்டவர் காதல்செய் கோயில்
மறை கொண்ட நல்வானவர் தம்மில்
அறையும் ஒலிசேரும் ஐயாறே
(5)
உமையாள் ஒருபாகமதாகச்
சமைவார் அவர் சார்விடமாகும்
அமையார் உடல் சோர்தர முத்தம்
அமையா வரும் அந்தண் ஐயாறே
(6)
தலையில் தொடை மாலை அணிந்து
கலை கொண்டதொர் கையினர் சேர்வாம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர்கொண்டு வணங்கும் ஐயாறே
(7)
வரமொன்றிய மாமலரோன் தன்
சிரமொன்றை அறுத்தவர் சேர்வாம்
வரை நின்றிழிவார் தருபொன்னி
அரவம் கொடுசேரும் ஐயாறே
(8)
வரை ஒன்றதெடுத்த அரக்கன்
சிரமங்கம் நெரித்தவர் சேர்வாம்
விரையின் மலர் மேதகு பொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே
(9)
சங்கக் கயனும் அறியாமைப்
பொங்கும் சுடரானவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல் கொண்டு
அங்கிக்கெதிர் காட்டும் ஐயாறே
(10)
துவராடையர் தோல் உடையார்கள்
கவர்வாய் மொழி காதல் செய்யாதே
தவ ராசர்கள் தாமரையானோடு
அவர்தாம்அணை அந்தண் ஐயாறே
(11)
கலையார் கலிக்காழியர் மன்னன்
நலமார்தரு ஞான சம்பந்தன்
அலையார் புனல்சூழும் ஐயாற்றைச்
சொலுமாலை வல்லார் துயர் வீடே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page