(1)
திருத்திகழ் மலைச் சிறுமியோடு மிகுதேசர்
உருத்திகழ் எழில்கயிலை வெற்பில் உறைதற்கே
விருப்புடைய அற்புதர் இருக்கும் இடம், ஏரார்
மருத்திகழ் பொழில்குலவு வண் திருவையாறே
(2)
கந்தமர உந்துபுகை உந்தலில் விளக்கேர்
இந்திரன் உணர்ந்துபணி எந்தைஇடம், எங்கும்
சந்தமலியும் தருமிடைந்த பொழில் சார
வந்தவளி நந்தணவு வண் திருவையாறே
(3)
கட்டுவடம் எட்டுமுறு வட்ட முழவத்தில்
கொட்டு கரமிட்டஒலி தட்டும்வகை நந்திக்கு
இட்டமிக நட்டமவை இட்டவர் இடம், சீர்
வட்டமதிலுள் திகழும் வண் திருவையாறே
(4)
நண்ணியொர் வடத்தின்நிழல் நால்வர் முனிவர்க்கன்று
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம், சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொடு உந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண் திருவையாறே
(5)
வென்றிமிகு தாருகனது ஆருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகதம் ஓவ
நின்று நடமாடியிட நீடுமலர் மேலால்
மன்றல் மலியும் பொழில்கொள் வண் திருவையாறே
(6)
பூதமொடு பேய்கள்பல பாட நடமாடிப்
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
கோதையர் இடும்பலி கொளும் பரன்இடம், பூ
மாதவி மணங்கமழும் வண் திருவையாறே
(7)
துன்னுகுழல் மங்கைஉமை நங்கை சுளிவெய்தப்
பின்னொரு தவம் செய்துழல் பிஞ்ஞகனும் அங்கே
என்னசதி என்றுரைசெய் அங்கணன் இடம், சீர்
மன்னு கொடையாளர் பயில்வண் திருவையாறே
(8)
இரக்கமில் குணத்தொடு உலகெங்கும் நலி வெம்போர்
அரக்கன் முடியத்தலை புயத்தொடும் அடங்கத்
துரக்க விரலில் சிறிது வைத்தவர் இடம், சீர்
வரக் கருணையாளர் பயில் வண் திருவையாறே
(9)
பருத்துருவதாகி விண் அடைந்தவன், ஒர் பன்றிப்
பெருத்துருவதாய் உலகிடந்தவனும் என்றும்
கருத்துருவொணா வகை நிமிர்ந்தவன் இடம், கார்
வருத்துவகை தீர்கொள் பொழில் வண் திருவையாறே
(10)
பாக்கியமது ஒன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்கள் என்றுடல் பொதிந்து திரிவார் தம்
நோக்கரிய தத்துவன் இடம், படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண் திருவையாறே
(11)
வாசமலியும் பொழில்கொள் வண் திருவையாற்றுள்
ஈசனை எழில்புகலி மன்னவன் மெய்ஞ்ஞானப்
பூசுரன் உரைத்த தமிழ்பத்தும் இவைவல்லார்
நேசமலி பத்தரவர் நின்மலன் அடிக்கே