திருவையாறு – சம்பந்தர் தேவாரம் (5):

<– திருவையாறு

(1)
கோடல், கோங்கம், குளிர் கூவிள மாலை, குலாயசீர்
ஓடுகங்கை ஒளி வெண்பிறை சூடும் ஒருவனார்
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணாகவே
ஆடுமாறு வல்லானும் ஐயாறுடை ஐயனே
(2)
தன்மை யாரும் அறிவாரிலை, தாம் பிறர் எள்கவே
பின்னு முன்னும் சில பேய்க்கணம் சூழத் திரிதர்வர்
துன்ன ஆடை உடுப்பர், சுடலைப் பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறுடை ஐயனே
(3)
கூறு பெண், உடை கோவணம், உண்பது வெண்தலை
மாறிலாரும் கொள்வாரிலை, மார்பில் அணிகலம்
ஏறுமேறித் திரிவர், இமையோர் தொழுதேத்தவே
ஆறு நான்கும் சொன்னானும் ஐயாறுடை ஐயனே
(4)
பண்ணில் நல்ல மொழியார், பவளத்துவர் வாயினார்
எண்ணில் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற கண்ணினார்
வண்ணம்பாடி வலிபாடித் தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந்தானும் ஐயாறுடை ஐயனே
(5)
வேனல்ஆனை வெருவ உரி போர்த்துமை அஞ்சவே
வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேனெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும்பின் தெளி
ஆனஞ்சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே
(6)
எங்குமாகி நின்றானும், இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும், மதிசூடு மைந்தனும்
பங்கமில் பதினெட்டொடு நான்குக்குணர்வுமாய்
அங்கம்ஆறும் சொன்னானும் ஐயாறுடை ஐயனே
(7)
ஓதியாரும் அறிவாரிலை ஓதி உலகெலாம்
சோதியாய் நிறைந்தான், சுடர்ச் சோதியுள் சோதியான்
வேதியாகி விண்ணாகி மண்ணோடுஎரி காற்றுமாய்
ஆதியாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே
(8)
குரவ நாண்மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய்
விரவு நீறணிவார் சில தொண்டர் வியப்பவே
பரவி நாள்தொறும் பாடநம் பாவம் பறைதலால்
அரவம் ஆர்த்துகந்தானும் ஐயாறுடை ஐயனே
(9)
உரைசெய் தொல்வழி செய்தறியா இலங்கைக்கு மன்
வரைசெய் தோளடர்த்து மதி சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரியின் வடபாலது காதலால்
அரைசெய் மேகலையானும் ஐயாறுடை ஐயனே
(10)
மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொற்கழல்
கோலமாய்க் கொழுந்தீன்று பவளம் திரண்டதோர்
ஆல நீழல்உளானும் ஐயாறுடை ஐயனே
(11)
கையிலுண்டுழல்வாரும், கமழ்துவர் ஆடையான்
மெய்யைப் போர்த்துழல்வாரும்  உரைப்பன மெய்யல
மைகொள் கண்டத்தெண்தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே
ஐயம் தேர்ந்தளிப்பானும் ஐயாறுடை ஐயனே
(12)
பலிதிரிந்துழல் பண்டங்கன் மேய ஐயாற்றினைக்
கலிகடிந்த கையான் கடற்காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்தமிழ் பத்தும் வல்லார்கள் போய்
மலிகொள் விண்ணிடை மன்னியசீர் பெறுவார்களே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page