(1)
குறுவித்தவா குற்ற நோய்வினை காட்டிக், குறுவித்த நோய்
உறுவித்தவா, உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
அறிவித்தவாறடியேனை ஐயாறன் அடிமைக்களே
செறிவித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ்எனையே
(2)
கூர்வித்தவா குற்ற நோய்வினை காட்டியும் கூர்வித்தநோய்
ஊர்வித்தவா, உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
ஆர்வித்தவாறடியேனை ஐயாறன் அடிமைக்களே
சேர்வித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ்எனையே
(3)
தாக்கினவா சலமே வினை காட்டியும் தண்டித்தநோய்
நீக்கினவா, நெடு நீரில் நின்றேற நினைந்தருளி
ஆக்கினவாறடியேனை ஐயாறன் அடிமைக்களே
நோக்கினவா தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ்எனையே
(4)
தருக்கின நான் தகவின்றியும் ஓடச் சலமதனால்
நெருக்கினவா, நெடு நீரில் நின்றேற நினைந்தருளி
உருக்கினவாறடியேனை ஐயாறன் அடிமைக்களே
பெருக்கினவா தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ்எனையே
(5)
இழிவித்தவாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்துக்
கழிவித்தவா, கட்ட நோய்வினை தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்தவாறடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொழுவித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ்எனையே
(6)
இடைவித்தவாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்து
உடைவித்தவாறுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
அடைவித்தவாறடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொடர்வித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ்எனையே
(7)
படக்கினவா, பட நின்று பன்னாளும் படக்கினநோய்
அடக்கினவாறதன்றியும் தீவினை பாவமெல்லாம்
அடக்கினவாறடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொடக்கினவா தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ்எனையே
(8)
மறப்பித்தவா, வல்லை நோய்வினை காட்டி மறப்பித்தநோய்
துறப்பித்தவா, துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
இறப்பித்தவாறடியேனை ஐயாறன் அடிமைக்களே
சிறப்பித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ்எனையே
(9)
துயக்கினவா, துக்க நோய்வினை காட்டித் துயக்கினநோய்
இயக்கினவாறிட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்தருளி
அயக்கினவாறடியேனை ஐயாறன் அடிமைக்களே
மயக்கினவா தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ்எனையே
(10)
கறுத்துமிட்டார் கண்டம், கங்கை சடைமேல் கரந்தருளி
இறுத்துமிட்டார், இலங்கைக்கிறை தன்னை இருபதுதோள்
அறுத்துமிட்டார், அடியேனை ஐயாறன் அடிமைக்களே
பொறுத்துமிட்டார் தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ்எனையே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...