திருவையாறு – அப்பர் தேவாரம் (8):

<– திருவையாறு

(1)
தானலாதுலகம் இல்லை, சகமலாதடிமை இல்லை
கானலாதாடல் இல்லை, கருதுவார் தங்களுக்கு
வானலாதருளுமில்லை, வார்குழல் மங்கையோடும்
ஆனலாதூர்வதில்லை ஐயன் ஐயாறனார்க்கே
(2)
ஆலலால் இருக்கை இல்லை அருந்தவ முனிவர்க்கன்று
நூலலால் நொடிவதில்லை நுண்பொருள் ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலரடி வணங்க, வேலை
ஆலலால் அமுதமில்லை ஐயன் ஐயாறனார்க்கே
(3)
நரிபுரி சுடலை தன்னில் நடமலால் நவிற்றலில்லை
சுரிபுரி குழலியோடும் துணையலால் இருக்கையில்லை
தெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவலால் அருளுமில்லை
அரிபுரி மலர்கொடேத்தும் ஐயன் ஐயாறனார்க்கே
(4)
தொண்டலால் துணையுமில்லை, தோல்அலாதுடையுமில்லை
கண்டலாதருளுமில்லை, கலந்தபின் பிரிவதில்லை
பண்டை நான்மறைகள் காணாப் பரிசினன் என்றென்றெண்ணி
அண்டவானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே
(5)
எரியலால் உருவமில்லை, ஏறலால் ஏறலில்லை
கரியலால் போர்வையில்லை காண்தகு சோதியார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்றேத்தும்
அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே
(6)
என்பலால் கலனுமில்லை, எருதலால் ஊர்வதில்லை
புன்புலால் நாறு காட்டில் பொடியலால் சாந்துமில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழுதாடிப் பாடும்
அன்பலால் பொருளுமில்லை ஐயன் ஐயாறனார்க்கே
(7)
கீளலால் உடையும்இல்லை, கிளர்பொறி அரவம் பைம்பூண்
தோளலால் துணையுமில்லை, தொத்தலர்கின்ற வேனில்
வேளலால் காயப்பட்ட வீரரும் இல்லை, மீளா
ஆளலால் கைம்மாறில்லை ஐயன் ஐயாறனார்க்கே
(8)
சகமலாதடிமையில்லை, தானலால் துணையுமில்லை
நகமெலாம் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி
முகமெலாம் கண்ணீர் மல்க முன்பணிந்தேத்தும் தொண்டர்
அகமலால் கோயிலில்லை ஐயன் ஐயாறனார்க்கே
(9)
உமையலாதுருவமில்லை, உலகலாதுடையதில்லை
நமையெலாம் உடையர்ஆவர், நன்மையே தீமையில்லை
கமையெலாம் உடையராகிக் கழலடி பரவும் தொண்டர்க்கு
அமைவிலா அருள்கொடுப்பார் ஐயன் ஐயாறனார்க்கே
(10)
மலையலால் இருக்கையில்லை, மதித்திடா அரக்கன் தன்னைத்
தலையலால் நெரித்ததில்லை, தடவரைக் கீழடர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்ததில்லை
அலையினார் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page