திருவையாறு – அப்பர் தேவாரம் (7):

<– திருவையாறு

(1)
குண்டனாய்ச் சமணரோடே கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ, தூநெறியாகி நின்ற
அண்டனே, அமரர்ஏறே, திருவையாறமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுதுன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே
(2)
பீலிகையிடுக்கி நாளும் பெரியதோர் தவமென்றெண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்டதென்னே
வாலியார் வணங்கியேத்தும் திருவையாறமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்தவாறே
(3)
தட்டிடு சமணரோடே தருக்கிநான் தவமென்றெண்ணி
ஒட்டிடு மனத்தினீரே உம்மையான் செய்வதென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையாறமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மைநான் உகந்திட்டேனே
(4)
பாசிப்பன் மாசு மெய்யர், பலமிலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்குமாறறிய மாட்டேன்
தேசத்தார் பரவியேத்தும் திருவையாறமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயுமன்றே
(5)
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதியோர் தவமென்றெண்ணி
வடுக்களோடிசைந்த நெஞ்சே மதியிலீ பட்டதென்னே
மடுக்களில் வாளை பாயும் திருவையாறமர்ந்த தேனை
அடுத்து நின்றுன்னு நெஞ்சே அருந்தவம் செய்தவாறே
(6)
துறவியென்றவமதோரேன், சொல்லிய செலவு செய்து
உறவினால் அமணரோடும் உணர்விலேன் உணர்வொன்றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த திருவையாறமர்ந்த தேனை
மறவிலா நெஞ்சமேநன் மதியுனக்கடைந்தவாறே
(7)
பல்லுரைச் சமணரோடே பலபல காலமெல்லாம்
சொல்லிய செலவு செய்தேன், சோர்வனால் நினைந்த போது
மல்லிகை மலரும் சோலைத் திருவையாறமர்ந்த தேனை
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போதினியவாறே
(8)
மண்ணுளார் விண்ணுளாரும் வணங்குவார் பாவம் போக
எண்ணிலாச் சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண்ணிலா வெறிக்கும் சென்னித் திருவையாறமர்ந்த தேனைக்
கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தவாறே
(9)
குருந்தமதொசித்த மாலும், குலமலர் மேவினானும்
திருந்துநல் திருவடியும் திருமுடி காணமாட்டார்
அருந்தவ முனிவர் ஏத்தும் திருவையாறமர்ந்த தேனைப்
பொருந்தி நின்றுன்னு நெஞ்சே பொய்வினை மாயுமன்றே
(10)
அறிவிலா அரக்கனோடி அருவரை எடுக்கலுற்று
முறுகினான் முறுகக் கண்டு மூதறிவாளன் நோக்கி
நிறுவினான் சிறு விரலால் நெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினால் அருள்கள் செய்தான் திருவையாறமர்ந்த தேனே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page