திருவையாறு – அப்பர் தேவாரம் (10):

<– திருவையாறு

(1)
சிந்திப்பரியன, சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன, முத்தி கொடுப்பன, மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன, பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந்தாடும் ஐயாறன் அடித்தலமே
(2)
இழித்தன ஏழேழ் பிறப்பும் அறுத்தன, என்மனத்தே
பொழித்தன, போரெழில் கூற்றை உதைத்தன, போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக், கீழமுன்சென்று
அழித்தன, ஆறங்கமான ஐயாறன் அடித்தலமே
(3)
மணிநிறம் ஒப்பன, பொன்னிற மன்னின, மின்னியல் வாய்
கணிநிறமன்ன கயிலைப் பொருப்பன, காதல் செய்யத்
துணிவன, சீலத்தராகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன, சேயன தேவர்க்கு, ஐயாறன் அடித்தலமே
(4)
இருள்தரு துன்பப்படல மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள்தரு கண்ணிழந்துண் பொருள் நாடிப் புகலிழந்த
குருடரும் தம்மைப் பரவக், கொடுநரகக் குழிநின்று
அருள்தரு கைகொடுத்தேற்றும் ஐயாறன் அடித்தலமே
(5)
எழுவாய் இறுவாய் இலாதன, எங்கள் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவம்ஆவன, மாநரகக் குழிவாய்
விழுவாரவர் தம்மை வீழ்ப்பன மீட்பன, மிக்கஅன்போடு
அழுவார்க்கமுதங்கள் காண்க ஐயாறன் அடித்தலமே
(6)
துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர் தம்மை
இன்பக் கரை முகந்தேற்றும் திறத்தன, மாற்றயலே
பொன் பட்டொழுகப் பொருந்தொளி செய்யும் அப்பொய் பொருந்தா
அன்பர்க்கணியன காண்க ஐயாறன் அடித்தலமே
(7)
களித்துக் கலந்ததொர் காதல் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்னின்றஇப் பத்தரைக், கோதில் செந்தேன்
தெளித்துச் சுவை அமுதூட்டி அமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெரும் செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே
(8)
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத்தோச்சி மருங்குசென்று
விருத்திக்குழக்க வல்லோர்கட்கு விண்பட்டிகை இடுமால்
அருத்தித்துருந்தவர்ஏத்தும் ஐயாறன் அடித்தலமே
(9)
பாடும் பறண்டையும் ஆந்தையும் ஆர்ப்பப் பரந்து, பல்பேய்
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக், குறுநரிகள்
நீடும்குழல் செய்ய வைய நெளிய !நிணப்பிணக்காட்
டாடும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே
(10)
நின்போல் அமரர்கள் நீள்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போதுழக்கிப் பவளம் தழைப்பன, பாங்கறியா
என்போலிகள் பறித்திட்ட இலையும் முகையுமெல்லாம்
அம்போதெனக் கொள்ளும் ஐயாறன் அடித்தலமே
(11)
மலையார் மடந்தை மனத்தன, வானோர் மகுடமன்னி
நிலையாய் இருப்பன, நின்றோர் மதிப்பன, நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன, பொன்னுலகம் அளிக்கும்
அலையார் புனல்பொன்னி சூழ்ந்தவை ஐயாறன் அடித்தலமே
(12)
பொலம் புண்டரீகப் புதுமலர் போல்வன, போற்றிஎன்பார்
புலம்பும் பொழுதும் புணர் துணையாவன, பொன்னனையாள்
சிலம்பும் செறிபாடகமும், செழும் கிண்கிணித் திரளும்
அலம்பும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே
(13)
உற்றார் இலாதார்க்குறுதுணை ஆவன, ஓதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமையுடையன, காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகம் தான்கொடுக்கும்
அற்றார்க்கரும் பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே
(14)
வானைக் கடந்தண்டத்தப்பால் மதிப்பன, மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன, உத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே உதிப்பன, நங்கையஞ்ச
ஆனை உரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே
(15)
மாதிர மானிலம் ஆவன, வானவர் மாமுகட்டின்
மீதன, மென்கழல் வெங்கச்சு வீக்கின, வெந்நமனார்
தூதரை ஓடத் துரப்பன, துன்பறத் தொண்டு பட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே
(16)
பேணித் தொழுமவர் பொன்னுலகாளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறியிட்டுக் கொடுத்திமையோர் முடிமேல்
மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே
(17)
ஓதிய ஞானமும் ஞானப் பொருளும், ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன, விண்ணு மண்ணும்
சோதியும் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன, தூமதியோடு
ஆதியும் அந்தமும் ஆனவை ஐயாறன் அடித்தலமே
(18)
சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண்டு
அணங்கும் குழலி அணியார் வளைக்கரம் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும், வருடும் பொழுதும், வண் காந்தள் ஒண்போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே
(19)
சுழலார் துயர்வெயில் சுட்டிடும் போதடித் தொண்டர் துன்னும்
நிழலாவன,  என்றும் நீங்காப் பிறவி  நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ, கால வனம் கடந்த
அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே
(20)
வலியான் தலைபத்தும் வாய்விட்டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை உதைத்து விண்ணோர் கண்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப் பன்னாளும் பலரிகழ
அலியா நிலைநிற்கும் ஐயாறன் அடித்தலமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page