திருவையாறு – அப்பர் தேவாரம் (6):

<– திருவையாறு

(1)
கங்கையைச் சடையுள் வைத்தார், கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார், திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார், மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே
(2)
பொடிதனைப் பூச வைத்தார், பொங்கு வெண்ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார், காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே
(3)
உடைதரு கீளும் வைத்தார், உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார், பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார், வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே
(4)
தொண்டர்கள் தொழவும் வைத்தார், தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார், எமக்கென்றும் இன்பம் வைத்தார்
வண்டுசேர் குழலினாளை மருவியோர் பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள்ஏத்தும் ஐயன் ஐயாறனாரே
(5)
வானவர் வணங்க வைத்தார், வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார், காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார், ஆட்டுவார்க்கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே
(6)
சங்கணி குழையும் வைத்தார், சாம்பர்மெய் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார், விரிபொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார், கடுவினை களைய வைத்தார்
அங்கமதோத வைத்தார் ஐயன் ஐயாறனாரே
(7)
பத்தர்கட்கருளும் வைத்தார், பாய்விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார், சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார், முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே
(8)
ஏறுகந்தேற வைத்தார், இடைமருது இடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார், நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார், கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாறனாரே
(9)
பூதங்கள் பலவும் வைத்தார், பொங்கு வெண்ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார், கின்னரம் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார், பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே
(10)
இரப்பவர்க்கீய வைத்தார், ஈபவர்க்கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கைதன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page