(1)
விடகிலேன் அடிநாயேன், வேண்டியக்கால் யாதொன்றும்
இடகிலேன், அமணர்கள் தம்அறவுரை கேட்டு அலமந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச் சேவடி காண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க்காளாய் நானுய்ந்தேனே
(2)
செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி, குழைக்காதர்
கொம்பமரும் கொடிமருங்குல் கோல்வளையாள் ஒருபாகர்
வம்பவிழு மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர்க்காளாய் நானுய்ந்தேனே
(3)
நணியானே சேயானே நம்பானே, செம்பொன்னின்
துணியானே, தோலானே, சுண்ண வெண்ணீற்றானே
மணியானே, வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே, ஐயாறர்க்காளாய் நானுய்ந்தேனே
(4)
ஊழித்தீயாய் நின்றாய், உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீயாய் நின்றாய், வாழ்த்துவார் வாயானே
பாழித்தீயாய் நின்றாய், படர்சடைமேல் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறர்க்காளாய் நானுய்ந்தேனே
(5)
சடையானே, சடையிடையே தவழும் தண் மதியானே
விடையானே, விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே, உடைதலை கொண்டூரூர் உண்பலிக்குழலும்
அடையானே, ஐயாறர்க்காளாய் நானுய்ந்தேனே
(6)
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்று
ஆராத ஐயாறர்க்காளாய் நானுய்ந்தேனே
(7)
கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய், எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய், விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க்காளாய் நானுய்ந்தேனே
(8)
மின்னானாய் உருமானாய், வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய், பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்கும் காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர்க்காளாய் நானுய்ந்தேனே
(9)
முத்திசையும் புனல்பொன்னி மொய்பவளம் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் எனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர்க்காளாய் நானுய்ந்தேனே
(10)
கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்
திருவிரலால் உதைகரணம் செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர்க்காளாய் நானுய்ந்தேனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...