திருவையாறு – அப்பர் தேவாரம் (5):

<– திருவையாறு

(1)
சிந்தை வண்ணத்தராய்த் திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய் முழு நீறணி
சந்தி வண்ணத்தராய்த் தழல் போல்வதோர்
அந்தி வண்ணமும்ஆவர் ஐயாறரே
(2)
மூல வண்ணத்தராய் முதலாகிய
கோல வண்ணத்தராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்தராகி நெடும்பளிங்கு
ஆல வண்ணத்தர்ஆவர் ஐயாறரே
(3)
சிந்தை வண்ணமும் தீயதோர் வண்ணமும்
அந்திப் போதழகாகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்ததொர் வண்ணமும்
அந்தி வண்ணமும்ஆவர் ஐயாறரே
(4)
இருளின் வண்ணமும், ஏழிசை வண்ணமும்
சுருளின் வண்ணமும், சோதியின் வண்ணமும்
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமும்ஆவர் ஐயாறரே
(5)
இழுக்கின் வண்ணங்களாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்களாகியும் கூடியும்
மழைக்கண் மாமுகிலாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமும்ஆவர் ஐயாறரே
(6)
இண்டை வண்ணமும், ஏழிசை வண்ணமும்
தொண்டர் வண்ணமும், சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்களாய்க் கனல் மாமணி
அண்ட வண்ணமும்ஆவர் ஐயாறரே
(7)
விரும்பும் வண்ணமும், வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமும்ஆவர் ஐயாறரே
(8)
ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி போர்த்ததொர் வண்ணமும்
ஆழித் தீயுருவாகிய வண்ணமும்
ஆழி வண்ணமும்ஆவர் ஐயாறரே
(9)
செய் தவன் திருநீறணி வண்ணமும்
எய்த நோக்கரிதாகிய வண்ணமும்
கைது காட்சி அரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமும்ஆவர் ஐயாறரே
(10)
எடுத்த வாளரக்கன் திறல் வண்ணமும்
இடர்கள் போல் பெரிதாகிய வண்ணமும்
கடுத்த கைநரம்பால் இசை வண்ணமும்
அடுத்த வண்ணமும்ஆவர் ஐயாறரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page