(1)
மாதர்ப் பிறைக் கண்ணியானை, மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்ற போது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
(2)
போழிளம் கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி
வாழியம் போற்றி என்றேத்தி வட்டமிட்டுஆடா வருவேன்
ஆழி வலவன் நின்றேத்தும் ஐயாறடைகின்ற போது
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
(3)
எரிப்பிறைக் கண்ணியினானை, ஏந்திழையாளொடும் பாடி
முரித்த விலயங்களிட்டு முகமலர்ந்தாடா வருவேன்
அரித்தொழுகும் வெள்ளருவி ஐயாறுடைகின்ற போது
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
(4)
பிறையிளம் கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயில்ஆலும் ஐயாறடைகின்ற போது
சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
(5)
ஏடுமதிக் கண்ணியானை, ஏந்திழையாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையும் கைதொழுதாடா வருவேன்
ஆடலமர்ந்துறைகின்ற ஐயாறடைகின்ற போது
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
(6)
தண்மதிக் கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி
உண்மெலி சிந்தையனாகி உணரா உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்துறைகின்ற ஐயாறடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
(7)
கடிமதிக் கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய்வேண்டுவ சொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்கும் கழலால் ஐயாறடைகின்ற போது
இடிகுரல் அன்னதொர் ஏனம்இசைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
(8)
விரும்பு மதிக்கண்ணியானை, மெல்லியலாளொடும் பாடிப்
பெரும்புலர் காலையெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயாறடைகின்ற போது
கருங்கலை பேடையொடாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
(9)
முற்பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்று நின்றாரோடு ஐயாறடைகின்ற போது
நற்றுணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
(10)
திங்கள் மதிக்கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி
எங்கருள் நல்கும் கொல் எந்தை எனக்கினி என்னா வருவேன்
அங்கிள மங்கையர் ஆடும் ஐயாறடைகின்ற போது
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
(11)
வளர்மதிக் கண்ணியினானை, வார் குழலாளொடும் பாடிக்
களவு படாததொர் காலம் காண்பான் கடைக்கண் நிற்கின்றேன்
அளவு படாததொர் அன்போடு ஐயாறடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...