திருவையாறு – அப்பர் தேவாரம் (2):

<– திருவையாறு

(1)
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
    அனலாடி ஆரமுதே என்றேன் நானே
கூரார் மழுவாள் படையொன்றேந்திக்
    குறள்பூதப் பல்படையாய் என்றேன் நானே
பேராயிரம் உடையாய் என்றேன் நானே
    பிறைசூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே
ஆரா அமுதேஎன் ஐயாறன்னே
    என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
(2)
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்கும்
    தீர்த்தா புராணனே என்றேன் நானே
மூவா மதிசூடி என்றேன் நானே
    முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே
ஏவார் சிலையானே என்றேன் நானே
    இடும்பைக் கடல்நின்றும் ஏற வாங்கி
ஆவா என்றருள் புரியும் ஐயாறன்னே
    என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
(3)
அஞ்சுண்ண வண்ணனே என்றேன் நானே
    அடியார்கட்காரமுதே என்றேன் நானே
நஞ்சணி கண்டனே என்றேன் நானே
    நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சுணர உள்புக்கிருந்த போது
    நிறையும் அமுதமே என்றேன் நானே
அஞ்சாதே ஆள்வானே ஐயாறன்னே
    என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
(4)
தொல்லைத் தொடுகடலே என்றேன் நானே
    துலங்கும் இளம்பிறையாய் என்றேன் நானே
எல்லை நிறைந்தானே என்றேன் நானே
    ஏழ்நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே
அல்லல் கடல் புக்கழுந்துவேனை
    வாங்கியருள் செய்தாய் என்றேன் நானே
எல்லையாம் ஐயாறா என்றேன் நானே
    என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
(5)
இண்டைச் சடைமுடியாய் என்றேன் நானே
    இருசுடர் வானத்தாய் என்றேன் நானே
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே
    துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே
கண்டம் கறுத்தானே என்றேன் நானே
    கனலாகும் கண்ணானே என்றேன் நானே
அண்டத்துக்கப்பாலாம் ஐயாறன்னே
    என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
(6)
பற்றார் புரமெரித்தாய் என்றேன் நானே
    பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே
    கடுவிடை ஒன்றூர்தியாய் என்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளாய் என்றேன் நானே
    பார்த்தர்க்கருள் செய்தாய் என்றேன் நானே
அற்றார்க்கருள் செய்யும் ஐயாறன்னே
    என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
(7)
விண்ணோர் தலைவனே என்றேன் நானே
    விளங்கும் இளம்பிறையாய் என்றேன் நானே
எண்ணார் எயிலெரித்தாய் என்றேன் நானே
    ஏகம்பம் மேயானே என்றேன் நானே
பண்ணார் மறைபாடி என்றேன் நானே
    பசுபதீ பால்நீற்றாய் என்றேன் நானே
அண்ணா ஐயாறனே என்றேன் நானே
    என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
(8)
அவனென்று நானுன்னை அஞ்சாதேனை
    அல்லல் அறுப்பானே என்றேன் நானே
சிவனென்று நானுன்னை எல்லாம் சொல்லச்
    செல்வம் தருவானே என்றேன் நானே
பவனாகி என்உள்ளத்துள்ளே நின்று
    பண்டை வினையறுப்பாய் என்றேன் நானே
அவனென்றே ஆதியே ஐயாறன்னே
    என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
(9)
கச்சி ஏகம்பனே என்றேன் நானே
    கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சன் மணாளனே என்றேன் நானே
    நினைப்பார் மனத்துளாய் என்றேன் நானே
உச்சம் போதேறேறீ என்றேன் நானே
    உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயாறன்னே
    என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
(10)
வில்லாடி வேடனே என்றேன் நானே
    வெண்ணீறு மெய்க்கணிந்தாய் என்றேன் நானே
சொல்லாய சூழலாய் என்றேன் நானே
    சுலாவாய தொல்நெறியே என்றேன் நானே
எல்லாமாய் என்னுயிரே என்றேன் நானே
    இலங்கையர் கோன் தோளிறுத்தாய் என்றேன் நானே
அல்லா வினைதீர்க்கும் ஐயாறன்னே
    என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page